தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் பூரண முடக்கம்: யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் ஆதரவு



கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரத்தில் நீதி கோரியும், சர்வதேசத்தின் கண்காணிப்பை வலியுறுத்தியும் இன்று வெள்ளிக்கிழமை(28.07.2023) வடக்கு – கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்படவுள்ள முழு அடைப்புப் போராட்டத்திற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் பூரண ஆதரவினைத் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் சி.தங்கராஜா மற்றும் ஊழியர் சங்க இணைச் செயலாளர் த.சிவரூபன் ஆகியோரின் கையொப்பங்களுடன் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த  அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையின் தமிழர் பிரதேசங்களில் இதுகால வரையிலும் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகள் விவகாரங்கள் பூசி மெழுகப்பட்டுக் காத்திரமான நடவடிக்கைகள் எதுவுமின்றி நீர்த்துப்போகச் செய்யப்பட்டமையே வரலாறு. இதேபோன்று மேற்படி கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரத்திலும் நடைபெறாது இருக்க வேண்டும் என்பதுடன் கொக்குத் தொடுவாய் மனிதப்  புதைகுழி உட்படத் தமிழர் பிரதேசங்களில் கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து மனிதப் புதைகுழிகளும் உரிய வகையில் சர்வதேச கண்காணிப்புடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு உண்மைகளை வெளிக்கொணர வேண்டியது அவசியமானது என்பதனை இச் சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

இவ் விவகாரத்தின் நியாயத் தன்மையினைப் புரிந்து கொண்டு இதனைத் தமது தனிப்பட்ட சுயலாபங்களுக்கோ, அரசியல் தேவைகளுக்கோ பயன்படுத்தாது உண்மையான தீர்வினை வலியுறுத்தி சிங்கள முற்போக்குச் சக்திகள் உட்பட்ட அனைத்து தமிழ்த் தரப்பினரும் ஒன்றிணைந்து போராட வேண்டுமென்பதுடன் அனைவரினதும் முழு ஆதரவினையும் வேண்டி நிற்கிறோம் எனவும் அந்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.