வட- கிழக்கில் இன்று பூரண ஹர்த்தால்: தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி முழு ஆதரவு

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும், சர்வதேச கண்காணிப்பை வலியுறுத்தியும் இன்று வெள்ளிக்கிழமை(28.07.2023) வடக்கு- கிழக்கு மாகாணங்களில் பூரண ஹர்த்தாலுக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் முல்லைத்தீவு, மன்னார் மற்றும் யாழ்.மாவட்டச் சங்கங்களின் தலைவிகள் கூட்டாக விடுத்த அழைப்பிற்குத்   மக்கள் முன்னணி முழுமையான ஆதரவைத் தெரிவிப்பதாக மேற்படி கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இந்தக் ஹர்த்தால் வெற்றியடைய வடக்கு- கிழக்கில் வாழும் அனைத்துத் தமிழ்மக்கள், முஸ்லிம் மக்கள் மற்றும் நீதி, நேர்மையை விரும்புகின்ற சிங்கள மக்கள் இந்த விடயத்தில் தங்களின் பூரண ஆதரவை வழங்க வேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.      

கொக்குவிலில் அமைந்துள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,  

மனிதப் புதைகுழிகள் சம்பந்தப்பட்ட விசாரணைகள் முற்றுமுழுதாக ஒரு சர்வதேச விசாரணையாக இருக்க வேண்டுமென்பதை இதற்கு முன்னரும் நாம் நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் பதிவு செய்திருக்கின்றோம். அந்தவகையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கங்கள் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரத்தில் ஒரு சர்வதேச விசாரணையைக் கோரி நிற்பதை நாம் வரவேற்கின்றோம்.              

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தினருக்கு அவர்களின் நிலைப்பாடுகளைத் தவறவிடுவதற்கு கடும் அழுத்தங்கள் நிலவும் என்பதில் எவ்வித சந்தேகங்களுமில்லை. இதற்கு மத்தியிலும் அவர்கள் ஹர்த்தால் அனுஷ்டிக்கும் தீர்மானம் எடுத்திருப்பதை நாம் முற்றுமுழுதாக ஆதரிக்கின்றோம்.

கொக்குத்தொடுவாயில் மனிதப் புதைகுழியை அகழும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அகழ்வு எனும் பெயரில் அங்குள்ள சாட்சியங்களை அழிக்கும் செயற்பாடுகளும் இலகுவாக இடம்பெறக் கூடிய வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. 

எனவே, அகழும் பணிகள் உடனடியாக நிறுத்தப்பட்டு  சர்வதேச விசாரணைக்கான சூழல் ஏற்படும் வரை அவ்விடம் பாதுகாக்கப்பட வேண்டும். நம்பகத் தன்மையான முறையில் இதுதொடர்பான விசாரணைகளும், அகழும் பணிகளும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதையும் குறித்த சங்கங்கள் வலியுறுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

(செ.ரவிசாந்)