நல்லூரில் நாளை யாழ்.மாநகரசபையின் முத்தமிழ் விழா

யாழ்.மாநகரசபை முன்னடுக்கும் முத்தமிழ் விழா-2023 நாளை சனிக்கிழமை(29.07.2023) பிற்பகல்-04.30 மணி முதல் நல்லூர் ஸ்ரீதுர்க்காதேவி மணிமண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

யாழ்.மாநகரசபையின் ஆணையாளர் இ.த.ஜெயசீலன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் வடமாகாண ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சாள்ஸ் பிரதம விருந்தினராகவும், வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன், ஐபிசி தமிழ் குழுமத்தின் தலைவர் க.பாஸ்கரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.

மேற்படி விழா நிகழ்வில் இயல், இசை, நாடகத் துறைகளில் பெரும் பங்காற்றிய மூவர் யாழ்.மாநகரசபையின் உயரிய விருதான 'அரசகேசரி' விருது வழங்கிக் கெளரவிக்கப்படவுள்ளனர்.

எம் மண்ணில் இன்றைய சூழலில் உயர்கல்வியும், மனிதநேயம், கலாசார பண்பாடுகளும் எனும் தலைப்பில் தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலயத் தலைவரும், சைவத்தமிழ் அறிஞருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகனை நடுவராகக் கொண்ட பட்டிமன்றமும் நடைபெறும்.

இதேவேளை, மேற்படி நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு யாழ்.மாநகரசபையினர் அழைத்துள்ளனர்.