வடமராட்சியில் கடற்படைக்கு காணி சுவீகரிக்கும் நடவடிக்கை ஐந்தாவது நாளாகவும் முறியடிப்பு!


யாழ்.வடமராட்சி கிழக்கில் கடற்படையின் தேவைகளுக்காக காணிச் சுவீகரிக்கும் நடவடிக்கை  நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை(28.07.2023) ஐந்தாவது நாளாகவும் பிரதேச மக்கள் மற்றும் தமிழ்த்தேசிய அரசியல்வாதிகளின் கடும் எதிர்ப்பால் முறியடிக்கப்பட்டுள்ளது.        

மருதங்கேணிப் பிரதேச செயலக  பிரிவுக்குட்பட்ட ஜே-432 வெற்றிலைக்கேணிப் பகுதியில் தனியாரொருவருக்குச் சொந்தமான ஒன்றரை பரப்புக் காணியை இலங்கை கடற்படையினருக்கு நிரந்தரமாகச் சுவீகரிக்கும் நோக்குடன் நில அளவீடு செய்வதற்கு நில அளவைத் திணைக்களத்தினர் காலை-09 மணியளவில் மேற்படி பகுதிக்கு வருகை தந்திருந்தனர்.  


இதன்போது காணி உரிமையாளர், பிரதேச மக்களுடன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எஸ்.சுகிர்தன், வடமாகாணக் காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் பிரதிநிதி இ.முரளிதரன், வடமராட்சி கிழக்கு மக்கள் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் செல்வன் உள்ளிட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு எதிர்ப்பினை வெளிப்படுத்தினர். இதனையடுத்து நில அளவைத் திணைக்களத்தினர் காணி சுவீகரிக்கும் நடவடிக்கையைத் தற்காலிகமாகக் கைவிட்டு அங்கிருந்து சென்றனர்.