வலிகாமம் வடக்கில் தையிட்டிப் பிரதேசத்தில் தனியார் காணியை ஆக்கிரமித்து இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்தை அகற்றுமாறு கோரியும், அதனைச் சுற்றியுள்ள தனியார் காணிகளை உடனடியாக உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென வலியுறுத்தியும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நேற்றுத் திங்கட்கிழமை(31.07.2023) மாலை ஐந்தாம் கட்டமாக மீண்டும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் தையிட்டியில் ஆரம்பிக்கப்பட்டு இன்று செவ்வாய்க்கிழமை(01.08.2023) இரண்டாவது நாளாகவும் இடம்பெற்றது.
போராட்டம் இடம்பெற்ற பகுதியை அண்டிய பகுதியில் பலாலிப் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்த நிலையில் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளவர்களையும், போராட்டத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களையும் நேற்று மாலை முதல் பொலிஸார் அடிக்கடி ஒளிப்படம் மற்றும் காணொளி எடுத்து அச்சுறுத்தியவாறு நின்றனர். இன்று இரண்டாவது நாளாக இடம்பெற்ற போராட்டத்திலும் பொலிஸார் போராட்டக்காரர்களையும், ஊடகவியலாளர்களையும் அடிக்கடி ஒளிப்படம் மற்றும் காணொளி எடுத்து அச்சுறுத்தியமையை அவதானிக்க முடிந்தது.
இ தேவேளை, குறித்த செயற்பாட்டிற்குத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பிரச்சாரச் செயலாளரும், சட்டத்தரணியுமான ந.காண்டீபன் ஆகியோர் போராட்டக் களத்தில் வைத்துக் கடும் கண்டனங்கள் வெளியிட்டிருந்தனர்.