13 ஆவது திருத்தம் தொடர்பில் பேச அழைப்பது மீண்டும் மீண்டும் வட-கிழக்கு வாழ் ஈழத்தமிழர்களை முட்டாளாக்கும் செயற்பாடு!


13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது சம்பந்தமாக இன்னொரு பேச்சுவார்த்தையை நடாத்துவதற்கான அழைப்பு ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து எமக்குக் கிடைக்கப் பெற்றுள்ளது.

தமிழ்மக்களின் அரசியல் தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தையென்று சர்வதேச ரீதியாகக் காட்டிக் கொண்டு அதேநேரம் தமிழ்மக்களின் இனப்பிரச்சினைக்கு எந்தவித தொடர்புமில்லாத ஏற்கனவே அரசியமைப்பிலுள்ள ஒற்றையாட்சிக் கட்டமைப்பான 13 ஆவது திருத்தம் தொடர்பாகப் பேச அழைப்பது மீண்டும் மீண்டும் வட-கிழக்கு வாழ் ஈழத்தமிழர்களை முட்டாளாக்குகின்ற செயற்பாடு. இதன்மூலம் ஈழத்தமிழர்களை ரணில் விக்கிரமசிங்க மதிக்கவும், கணக்கெடுக்கவும் தயாரில்லை என்பது வெளிப்படுத்தப்பட்டு ள்ளதாகத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ். கொக்குவிலில் அமைந்துள்ள தமிழ்த்தேசிய மக்கள் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.      

அவர் மேலும் தெரிவிக்கையில்,  

குட்டக் குட்டக் குனிபவனும் மடையன். குனியக் குனியக் குட்டுபவனும் மடையன் என்ற வகையில் உண்மை நிலையைத் தெரிந்து கொண்டு இந்தப் பேச்சுவார்த்தையில் தொடர்ச்சியாகக் கலந்து கொள்கின்ற தமிழ்த்தரப்புக்கள் தமிழ்மக்களின் பேரம் பேசும் வாய்ப்புக்களை முற்றிலும் இல்லாமலாக்குவதுடன் சிங்கள மக்களே ஏற்றுக் கொள்ளாத, அங்கீகரிக்காத ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக்கு முண்டு கொடுக்கும் செயலாக மாத்திரமே அமையும்.

மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்தமையின் 200 ஆவது ஆண்டு தற்போது நினைவு கூரப்படுகின்றது. நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பி வளர்ச்சியடைவதற்கு முதுகெலும்பாகவிருந்த மக்களின் பொருளாதாரத்தை மீண்டுமொருமுறை அழிக்கும் நோக்கில் தான் நாட்டின் கடன் மறுசீரமைப்பு வேலைத் திட்டமும் அமைந்துள்ளது.

எனவே, ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சி சிங்கள- பெளத்தம் அல்லாத தமிழ், முஸ்லிம், மலையக மக்களுக்கு ஒரு நீதியைப் பெற்றுக் கொடுக்கப் போவதில்லை. நாட்டின் பொருளாதாரத்தைக் கொள்ளையடித்த ராஜபக்சக்களின் தரப்பில் தங்கியிருக்கும் ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சி சிங்கள மக்களுக்கும் கூட ஒரு நேர்மையான ஆட்சியாக அமையவில்லை. 

ஆகவே, நாடாளுமன்றத் தேர்தலை நடாத்துவதற்கு மக்கள் அணிதிரண்டு அழுத்தங்களை வழங்குவதே இந்த நிலைமைகளை மாற்றியமைப்பதற்கான ஒரே வழி.

தெற்கில் ரணில் விக்கிரமசிங்க மக்களின் ஆணை இல்லாமல் பல முடிவுகளைச் செயற்படுத்தி வருவது போல வட-கிழக்கில் சமஷ்டிக்கான மக்கள் ஆணையைப் பெற்றவர்கள் தற்போது ஒற்றையாட்சிக்குள் இருக்கக் கூடிய 13 ஆவது திருத்தத்திற்குள் தமிழரசியலை முடக்கும் நோக்குடன் செயற்பட்டு வருகிறார்கள் என்பதை எமது மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.