சந்நிதியான் ஆச்சிரமத்தால் இரண்டு அறநெறிப் பாடசாலைகளுக்குப் பேருதவி

வவுனியா நெடுங்கேணி மாமடுச் சந்தியில் அமைந்துள்ள கற்பகா அறநெறிப் பாடசாலைக்கும், திருகோணமலை செல்வநாயகபுரம் உதயபுரிக் கிராமத்தில் அமைந்துள்ள முத்துக்குமாரசுவாமி அறநெறிப் பாடசாலைக்கும் சந்நிதியான் ஆச்சிரம நிர்வாகத்தால் நேற்று முன்தினம் சனிக்கிழமை(05.08.2023) பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

கற்பகா அறநெறிப் பாடசாலை மாணவர்களின் தேவைகளுக்காக 230,000 ரூபா பெறுமதியான கொட்டில் அமைப்பதற்கான கூரைப்  பொருட்களையும், அறநெறி போதிக்கும் இரண்டு ஆசிரியைகளுக்கு 90,000 ரூபா பெறுமதியான இரு புதிய துவிச்சக்கரவண்டிகளையும் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் நேரடியாகச் சென்று கையளித்தார். 

பொருளாதார நலிவுற்ற குடும்பத்தைச் சேர்ந்த குறித்த அறநெறி ஆசிரியர்கள் இருவரும் மூன்று மற்றும் ஐந்து கிலோ மீற்றர் தூரம் நடந்து சென்று இதுவரை காலமும் மாணவர்களுக்கு கல்வி போதித்து வந்த நிலையில் அவர்களின் பொருளாதார நிலைமையைக் கருத்திற் கொண்டு புதிதாக துவிச்சக்கரவண்டிகள் கொள்வனவு செய்யப்பட்டு வழங்கி வைக்கப்பட்டன.    


இதேவேளை, முத்துக்குமாரசுவாமி அறநெறிப் பாடசாலையின் கட்டடப் பணிகளுக்காக ஒன்பதாம் கட்டமாக   200,000 நிதி சந்நிதியான் ஆச்சிரம நிர்வாகம் சார்பில் மேற்படி அறநெறிப் பாடசாலையின் உத்தியோகபூர்வ வங்கிக் கணக்கிலக்கத்திற்கு வைப்பிலிடப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.