பேராசிரியர்.விக்கினேஸ்வரன் நினைவேந்தல்: வருடம் தோறும் இணுவில் அறிவாலயம் முன்னெடுக்கும்

  


யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் இ.விக்கினேஸ்வரன் ஞாபகார்த்த நினைவேந்தலும் நினைவுப்  பேருரையும் நிகழ்வை பேராசிரியர் குடும்பத்தினரின் அனுசரணையில் இணுவில் அறிவாலயம் வருடம் தோறும் முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாகப் பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர்.வல்லிபுரம் மகேஸ்வரன் தெரிவித்தார்.

மறைந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர். இ.விக்கினேஸ்வரனின் நினைவேந்தலும் நினைவுப் பேருரையும் நிகழ்வு நேற்றுச் சனிக்கிழமை (05.08.2023) மாலை இணுவில் அறிவாலயத்தின் ஏற்பாட்டில் இணுவில் அறிவாலய மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்தநிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,   

துறைசார்ந்த கல்விமான்கள் நினைவுப் பேருரையை வருடாந்தம் நிகழ்த்தும் வகையில் இணுவில் அறிவாலயம் ஏற்பாடுகளை முன்னெடுக்கும்.      

இந்த நிகழ்வில் பேராசிரியர் சி.ரகுராம் ஊடகப் பெருவெளியில் செயற்கை நுண்ணறிவு எனும் தலைப்பில் நினைவுப் பேருரை ஆற்றியிருந்தார். அவரது உரையினை வெகுவிரைவில் நூலாக்கி ஊடகம் சார்ந்த மாணவர்களுக்கும், பாடசாலை மாணவர்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் வழங்குவோமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

(செ.ரவிசாந்)