இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மலையக மக்களின் வரலாற்றுக்கு வயது 200 ஆண்டுகள். இந்த நாட்டிலும், அவர்கள் வாழும் பிராந்தியங்களிலும் அவர்களுக்கு இருக்க வேண்டிய உடைமைப்பாட்டை உறுதி செய்யத் தேவையான தார்மீக சட்ட , அரசியல் அடிப்படையை வழங்க இது ஒன்றே போதுமானது. இலங்கையில் வாழும் சிங்களவர், தமிழர், முஸ்லீம்கள் போல மலையகத் தமிழர்களும் சகல உரிமைகளுடனும் வாழ வேண்டும் என்பதைத் தேசிய மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் உரத்துச் சொல்ல தலைமன்னார் முதல் மாத்தளை வரையான மலையகம்- 200 நடைபயணம் நிகழ்வு முனைந்து நிற்கிறது எனத் தெரிவித்துள்ள தமிழ் சிவில் சமூக அமையம் குறித்த நடைபயணத்திற்குத் தமது பூரண ஆதரவையும் வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பில் தமிழ் சிவில் சமூக அமையத்தின் இணைப் பேச்சாளர்களான அருட்பணி வீ.யோகேஸ்வரன் மற்றும் பொ.ந.சிங்கம் ஆகியோரின் கையொப்பங்களுடன் ஊடக அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இருநூறு ஆண்டுகளுக்கு முன் காலனித்துவவாதிகள் இவர்களை இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கொண்டு வந்தனர். ஏறத்தாழக் கொத்தடிமைகள் போலவே இதே பாதையினூடாக அவர்கள் பயணப்பட்டார்கள். இலங்கையின் பொருளாதாரத்தைக் காலனித்துவ ஆட்சியாளர்கள் விரும்பியபடி மாற்றத் தமது வியர்வையையும், குருதியையும் சிந்தினார்கள். அவ்வாறு மாற்றப் பட்ட பொருளாதார முறைமையே சுதந்திர இலங்கையின் அடிப்படையாகவும் இருந்தது. காலனித்துவ ஆட்சியாளர்களின் கைகளிலிருந்து சுதேச சிங்கள மேட்டுக் குடியினரின் கைகளுக்கு ஆட்சியதிகாரம் கைமாறிய சுதந்திரம் என்று சொல்லப்படும் நிகழ்வின் பின்னரும் இந்த மக்களின் வாழ்நிலையில் மாற்றம் ஏற்படவில்லை.
அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் ஒரு இயந்திரத்தின் 'எரிபொருளாக' மட்டுமே இவர்கள் ஆக்கப்பட்டனர். இவர்களில் ஒரு பகுதியினர் முதலில் நாடற்றவர்களாக்கப்பட்டனர். ஏனையவர்கள் வாக்குரிமையற்றவர்களாக அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் ஒரு இயந்திரத்தின் 'எரிபொருளாக' மட்டுமே இவர்கள் ஆக்கப்பட்டனர். இவர்களில் ஒரு பகுதியினர் முதலில் நாடற்றவர்களாக்கப்பட்டனர். ஏனையவர்கள் வாக்குரிமையற்றவர்களாக ஆக்கப்பட்டனர். பின்னர் வாக்குரிமை வழங்கப்பட்ட போதும் காணியுரிமை, வீட்டுரிமை அற்று, வாழ்வுரிமை மறுக்கப்பட்ட, முகவரியற்ற மனிதக் கூட்டமாக இவர்கள் பேணப்பட்டார்கள், பேணப்படுகிறார்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாகத் தமிழர்கள் எனும் பண்பாட்டு அடையாளம் கொண்டமை காரணமாக அனைத்து இனக் கலவரங்களிலும், வாழிடங்கள் எரிக்கப்பட்டு, கொல்லப்பட்டு, ஓட ஓட விரட்டியடிக்கப்பட்டார்கள். இந்த அடக்கு முறையை , ஒடுக்குமுறையை , இன அழிப்பைக் 'கைகளைக் கட்டியபடி' ஏற்கும் கட்டாய மனநிலையையும், அரசியல் கலாச்சாரத்தையும் ஆட்சியாளர்கள் உருவாக்கினார்கள்.
அரசியல், சமூகம், பொருளாதாரம், சமயம், சுகாதாரம், கல்வி, பண்பாடு போன்ற அனைத்துத் தளங்களிலும் இவர்களே இவர்களது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் நிலைமை வர இன்று இவர்கள் வேணவா கொண்டுள்ளார்கள். அதனை வெளிப்படுத்தும் நோக்கில் தாம் கடந்து வந்த பாதையை உலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்ட தலைமன்னாரிலிருந்து மாத்தளை வரை நடைப் பயணம் மேற்கொள்கின்றனர்.
மலைய மக்களின் வாழ்வுரிமையையும் , உடைமைப்பாட்டையும் கோரும் போராட்டம் தொடர எமது ஒத்துழைப்பையும், உணர்வுத் தோழமையையும் தமிழ் சிவில் சமூக அமையமாக நாம் வெளிப்படுத்தி நிற்கிறோம். வடக்கு- கிழக்கில் நடை பெற்ற விடுதலைப் போராட்டம் நசுக்கப்பட்டாலும், அனைவரும் அடிப்படை உரிமைகளுடன் வாழ வேண்டும் எனும் விடுதலைக் கருத்துருவாக்கத்தை ஒரு சிவில் சமூகமாக மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம். ஒடுக்கப்பட்ட மக்கள் என்னும் அடிப்படையில் நாங்கள் உங்களோடு இருக்கிறோம்.
அனைத்தையும் உதிரிகளாக நோக்கி அர்த்தக் குழப்பத்திற்கு உள்ளாகாமல் அனைத்தையும் தொகுத்து நோக்கி அடிமைத்தனத்தை அடையாளங்கண்டு அகற்ற உங்களுடனான எங்கள் உடனிருப்பைத் திரும்பவும் பதிவு செய்கிறோம். உங்களுடைய போராட்டம் தலைமன்னார் - மாத்தளைப் பாத யாத்திரையைக் கடந்து தொடர, அனைவருக்கும் விடுதலையை உறுதி செய்ய எங்கள் உணர்வுத் தோழமையை உறுதி செய்கிறோமெனவும் குறித்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.