விசேட அறநெறிச் சொற்பொழிவும் கூட்டுப் பிரார்த்தனையும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை(04.08.2023) மாலை-04 மணி முதல் யாழ். குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தில் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி.ஆறு.திருமுருகன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் ஐம்பதிற்கும் மேற்பட்ட மாணவச் சிறார்கள் கலந்து கொண்டு கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
நிகழ்வில் செஞ்சொற்செல்வர் ஆறு.திருமுருகன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறநெறிக் கருத்துக்களை ஆற்றினார். யாழ்.ஏழாலை ஸ்ரீமுருகன் வித்தியாலய அதிபர் சைவப்புலவர் செ.பரமேஸ்வரன் கலந்து கொண்டு "திருநீற்றின் மகிமை" எனும் தலைப்பில் விசேட அறநெறிச் சொற்பொழிவு நிகழ்த்தினார். நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் வாரம்தோறும் வெள்ளிக்கிழமைகளில் சிவபூமி ஆச்சிரமத்தில் இடம்பெறும் அறநெறி வகுப்புக்களில் கலந்து கொள்ளும் பொருட்டுச் சுவிஸ் நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் குப்பிழான் மண்ணைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மோகனதாஸ் என்பவரின் நிதிப் பங்களிப்பில் சைவத்தமிழரின் கலாசாரம் சார்ந்த உடைகள் வழங்கி வைக்கப்பட்டன.
மேற்படி நிகழ்வில் குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தின் பொறுப்பாளர் எஸ்.சிறிதரன், ஓய்வுநிலைக் கிராம சேவகர் சோ.பரமநாதன், சமூக ஆர்வலர் மோகனதாஸ், அவரது மகள், மாணவர்கள், கிராமத்தவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
(செ. ரவிசாந்)