உடுவில் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கலைஞர் ஒன்றுகூடல்

வலிகாமம் தெற்கு உடுவில் பிரதேச செயலக கலாசாரப் பேரவை நடாத்திய கலைஞர் ஒன்றுகூடலின் தொடர்- 03 நிகழ்வு அண்மையில் மேற்படி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் உடுவில் பிரதேச செயலர் த.முகுந்தன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வின் சிறப்பு அம்சமாக “காலப்பிழையோ வன்றிக் கடவுள்தரும் சோதனையோ சாலப் பொருந்திவந்து சாவெமக்குத் தருகிறாயே!” எனும் தொனிப்பொருளிலான கவியரங்கம் யாழ்.மாநகரசபையின் ஆணையாளரும், கவிஞருமான இ.த.ஜெயசீலன் தலைமையில் இடம்பெற்றது.

இக் கவியரங்க நிகழ்வில் வன்முறை என்னும் தலைப்பில் எழுத்தாளரும், வலிகாமம் வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளருமான சு.ஸ்ரீகுமரனும், போதை என்னும் தலைப்பில் கவிஞர் இ.மணிமாறனும், கடன் என்னும் தலைப்பில் கவிஞர் சி.மகாலிங்கமும், காதல் எனும் தலைப்பில் கவிஞர் வா.வடிவழகையனும் கலந்து கொண்டு கவிதைகளை அளிக்கை செய்தனர். 

சிரிக்கவும், சிந்தனைக்கு விருந்தளிப்பதாகவும் குறித்த கவியரங்க நிகழ்வு அமைந்தது.


இதேவேளை, மேற்படி நிகழ்வில் எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், உடுவில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

(செ.ரவிசாந்)