தொலைத்த பணத்தை கண்டெடுத்துக் கொடுத்த மாணவனுக்கு குப்பிழானில் பரிசிலும் பாராட்டும்

அறநெறிச் சொற்பொழிவும் கூட்டுப் பிரார்த்தனையும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை(11.08.2023) மாலை குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தில் இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வில் தொலைந்த ஒருதொகைப் பணத்தைக் கண்டெடுத்துக் கொடுத்த குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 10 ஆம் தரத்தைச் சேர்ந்த அதே கிராமத்தைச் சேர்ந்த பி.மதுசன் என்ற மாணவன் பரிசிலும் பாராட்டும் வழங்கிக் கெளரவிக்கப்பட்டார்.

அண்மையில் மேற்படி பாடசாலைக்குச் சென்ற போது ஓய்வுநிலைக் கிராம சேவகர் சோ.பரமநாதன் ஒரு தொகைப் பெறுமதியான பணத்தைத் தொலைத்திருந்தார். பணம் தொலைந்தமையால் ஓய்வுநிலைக் கிராம சேவகர் கவலையடைந்திருந்தார். இந்த நிலையில் குறித்த மாணவன் பாடசாலை வளாகத்தில் குப்பைகளுடன் காணப்பட்ட பணத்தைக் கண்டெடுத்துப் பாடசாலை அதிபரிடம் சேர்ப்பித்திருந்தார்.

அம் மாணவன் குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தில் வெள்ளிதோறும் இடம்பெறும் அறநெறி வகுப்புக்களில் பங்கெடுத்து வரும் நிலையில் நேற்றையதினம்  மாணவர்கள் மத்தியில் ஓய்வுநிலைக் கிராம சேவகர் பரமநாதன் குறித்த மாணவனுக்குப் பரிசில் வழங்கிக் கெளரவித்தார். அத்துடன் பணத்தைக் கண்டெடுத்து நேர்மையாகக் கையளித்த மாணவனின் சிந்தனை நல்ல சிந்தனை எனவும் தெரிவித்ததுடன் பாராட்டும் தெரிவித்தார். மாணவர்கள் அனைவரும் இணைந்து கைதட்டித் தமது பாராட்டுக்களை வெளிப்படுத்தினர். 

(செ.ரவிசாந்)