கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் சிறப்பிக்கப்பட்ட நூற்றாண்டு நினைவிடத் திறப்பு விழா

நூற்றாண்டு காணும் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட நூற்றாண்டு நினைவிடத் திறப்பு விழா நேற்று முன்தினம் புதன்கிழமை(09.08.2023) காலை-09 மணி முதல் சிறப்பாக இடம்பெற்றது.



கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முதல்வர் செந்தமிழ்ச் சொல்லருவி ச.லலீசன் தலைமையில் நடைபெற்ற விழா நிகழ்வில் இசுருபாய கல்வி அமைச்சின் ஆசிரியர் கல்விக்கான பிரதம ஆணையாளர் கலாநிதி.கே.ஏ.டி.புண்யதாச பிரதம விருந்தினராகவும், ஆசிரியர் கல்விக்கான பணிப்பாளர் ஸ்ரீமா தசநாயக்கா சிறப்பு விருந்தினராகவும், யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரியின் பீடாதிபதி சு.பரமானந்தம் கெளரவ விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.



கலாசாலை வளாகத்தில் அமைந்துள்ள யோகலிங்கேஸ்வரர் ஆலயத்தில் இடம்பெற்ற வழிபாடுகளைத் தொடர்ந்து விருந்தினர்கள் மாலைகள் அணிவிக்கப்பட்டு ஆசிரிய மாணவர்களின் காவடியாட்டம், குதிரையாட்டம், ஒயிலாட்டம் முதலான பாரம்பரியக் கலை வடிவ ஆற்றுகைகளுடன் வரவேற்று அழைத்துச் செல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து  மேற்படி கலாசாலை முன்றலில் புதிதாக அமைக்கப்பட்ட நூற்றாண்டு நினைவிடத்தை இசுருபாய கல்வி அமைச்சின் ஆசிரியர் கல்விக்கான பிரதம ஆணையாளர் கலாநிதி.கே.ஏ.டி.புண்யதாச திரைநீக்கம் செய்து சம்பிராதயபூர்வமாகத் திறந்து வைத்தார்.



அதனைத் தொடர்ந்து அங்கிருந்து விருந்தினர்கள் பாரம்பரியக் கலைவடிவங்களுடன் விழா  மண்டபம் நோக்கி அழைத்துச் செல்லப்பட்டனர். தொடர்ந்து கலாசாலையின்  ரதிலட்சுமி மண்டபத்தில் மங்கல விளக்கேற்றல், திருக்குறள் வழிபாட்டுடன் ஆரம்பமாகிப் பல்வேறு   நிகழ்வுகள் இடம்பெற்றன.

கலைநிகழ்வுகளாக இந்து, பௌத்தம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய சமயங்களின்  வழிபாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலான வரவேற்பு நடனமும், தமிழ், சிங்கள இஸ்லாமியப் பண்பாடுகளை வெளிப்படுத்தும் பல்கலாசார நடன நிகழ்வும் விழாவிற்குச் சிறப்புச் சேர்க்கும் வகையில் அமைந்திருந்தன. 

நூற்றாண்டு தொடர்பாக கலாசாலை ஆசிரிய மாணவர்களிடையே நடாத்தப்பட்ட கலாசாலை மற்றும் ஆசிரியர் கல்வி தொடர்பான பொது அறிவுப் போட்டியில் முதல் 20 இடங்களையும் பெற்றவர்களுக்கான பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.   

இதேவேளை, நிகழ்வில் கலந்து கொண்டிருந்த விருந்தினர்கள் கோப்பாய் ஆசிரியர் கலாசாலைச் சமூகத்தின் சார்பில் கெளரவிக்கப்பட்டனர்.

(செ.ரவிசாந்)