தையிட்டியில் போராட்டக்காரர்களை நையாண்டி செய்த சிங்கள நபர்!

யாழ்.வலிகாமம் வடக்கின் தையிட்டிப் பிரதேசத்தில் தனியார் காணியை ஆக்கிரமித்து இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்தை அகற்றுமாறு வலியுறுத்தியும், அதனைச் சுற்றியுள்ள தனியார் காணிகளை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டுமெனக் கோரியும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை(29.08.2023) மாலை-04.30 மணியளவில் விகாரை அமைந்துள்ள வீதியின் முகப்பிற்கு வெளியே தனியார் காணியில் ஆறாம் கட்டமாக ஆரம்பமான கவனயீர்ப்புப் போராட்டம் இன்று புதன்கிழமை(30.08.2023) இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது. 

பூரணை தினத்தை முன்னிட்டு இன்று மாலை மேற்படி விகாரையில் விசேட வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் மாலை-05 மணிக்குப் பின்னர் இராணுவ வாகனங்களில் சிங்களவர்கள் பலரும் விகாரைக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.

இந் நிலையில் இன்று மாலை-05.20 மணியளவில் சிறியரக ஹப் வாகனத்தில் இரண்டு சிங்கள நபர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். அவர்கள் விகாரை நோக்கிச் செல்லும் போது விகாரையின் வீதி முகப்பிற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தமது வழமையான எதிர்ப்பு நடவடிக்கையில்  ஈடுபட்டிருந்தனர். 

இந்நிலையில் விகாரை நோக்கிச் சென்ற இரு சிங்களவர்களில் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் போன்று தனது ஒரு கையைத் தூக்கி நையாண்டி செய்துள்ளார். பின்னர் அங்கு எதிர்ப்பில் ஈடுபட்டிருந்த மூத்த போராளியும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் முக்கிய செயற்பாட்டாளருமான பொன் மாஸ்டரைப் பார்த்து இரு கைகளையும் தூக்கி கும்பிட்டு வணக்கம் செலுத்தியுள்ளார்.

விகாரை அமைந்துள்ள வீதிக்குள் பிரவேசித்த பின்னரும் தனது ஒரு கையைத் தூக்கி நையாண்டி செய்தவாறு சென்றுள்ளார். குறித்த செயற்பாடு போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்களைச் சீண்டும் செயற்பாடாக அமைந்த நிலையில் போராட்டக்காரர்கள் அந்தச் செயற்பாட்டிற்கு எதிராகவும், சட்டவிரோத விகாரைக்கு எதிராக தொடர்ச்சியானவும் தொடர்ந்தும் உரத்துக் கோஷங்கள் எழுப்பினர்.