யாழ். குப்பிழான் கற்கரைக் கற்பக விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை(29.08.2023) வெகுசிறப்பாகவும், பக்திபூர்வமாகவும் இடம்பெற்றது.
காலை-08.30 மணியளவில் வசந்தமண்டபப் பூசை வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து விநாயகப் பெருமான், வள்ளி- தெய்வயானை சமேத முருகப் பெருமான், சண்டேஸ்வரர் ஆகிய முத்தெய்வங்களும் திருநடனத்துடன் உள்வீதியில் எழுந்தருளிக் காலை-10.15 மணியளவில் முத்தெய்வங்களும் முத்தேர்களில் ஆரோகணித்தனர்.
சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டு பண்ணுடன் ஓதப்பட்டுப் பின்னர் சிதறு தேங்காய்கள் உடைக்கப்பட்டது. தீபாராதனை வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து அடியவர்களின் அரோகராக் கோஷம் முழங்க முற்பகல்-11 மணியளவில் முத்தேர் பவனி ஆரம்பமானது.
முத்தேர்களும் இருப்பிடம் வந்தடைந்ததைத் தொடர்ந்து அடியவர்கள் அர்ச்சனை செய்து வழிபாடாற்றினர்.
முத்தேர்களின் பவனி இடம்பெற்ற போது பல ஆண் அடியவர்கள் அங்கப் பிரதட்சணம் செய்தும், பறவைக் காவடிகள் எடுத்தும் நேர்த்திக் கடன்கள் நிறைவேற்றினர். பெண் அடியவர்கள் பலரும் அடியளித்தும், கற்பூரச் சட்டிகள், பாற்காவடிகள் எடுத்தும் நேர்த்திக் கடன்கள் நிறைவேற்றினர்.
முத்தேர்களும் இருப்பிடம் வந்தடைந்ததைத் தொடர்ந்து குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் கனடாவின் ஏற்பாட்டில் பக்கவாத்திய சகிதம் சிறப்பு இன்னிசை நிகழ்வும் இடம்பெற்றது.
தேர்த் திருவிழாவை முன்னிட்டு ஆலய மணிமண்டபத்தில் அடியவர்களுக்கு அன்னதானம் பரிமாறப்பட்டதுடன் ஆலயச் சூழலில் குளிர்மை மிகு பானங்களும் பரிமாறப்பட்டன.
இதேவேளை, மேற்படி ஆலயத் தேர்த் திருவிழாவில் கொளுத்தும் வெயிலுக்கு மத்தியிலும் பல நூற்றுக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
(சிறப்புத் தொகுப்பு:- செ.ரவிசாந்)