மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளமையை முன்னிட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை மற்றும் கலைவட்டத்தின் ஏற்பாட்டில் ' 'சொர்க்கத்தின் சுமை: மலையகக் கதைகளின் காட்சி' எனும் தொனிப்பொருளிலான கண்காட்சி நேற்று முன்தினம் புதன்கிழமை(23.08.2023) பிற்பகல்-02.30 மணியளவில் மேற்படி பல்கலைக்கழக நுண்கலைத் துறை காட்சிக் கூடத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பேராசிரியர் தா.சனாதனன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு மங்கள விளக்கேற்றி மேற்படி கண்காட்சியைச் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
கண்காட்சியின் ஆரம்ப நாள் நிகழ்வில் யாழ்.இந்தியத் துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், இந்தியாவைச் சேர்ந்த பிரபல கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, இந்திய எழுத்தாளர் பெருமாள் முருகன், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் வரலாற்றாசிரியர் பேராசிரியர்.ஆ. இரா.வேங்கடேசலாபதி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர். சி.ரகுராம், பதிப்பாளர் கண்ணன் சுந்தரம், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள், இலக்கியவாதிகள், ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை மாணவர்கள் குழுவொன்று அண்மையில் மலையகத்தின் பல பகுதிகளுக்கும் நேரடியாகச் சென்று திரட்டிய தகவல்களை உள்ளடக்கி மலையக மக்களின் வரலாற்றையும், அவர்கள் படும் அவலங்களையும் காட்சிப்படுத்தலூடாக வெளிப்படுத்தும் நோக்கில் குறித்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத் துறையினர் தெரிவித்தனர்.
இதேவேளை, மேற்படி கண்காட்சியை நேற்று வியாழக்கிழமையும் (24.08.2023), இன்று வெள்ளிக்கிழமையும்(25.08.2023) பலரும் ஆர்வத்துடன் பார்வையிட்டுள்ளனர்.
அடுத்தவாரம்-31 ஆம் திகதி வியாழக்கிழமை வரை தினமும் காலை-09 மணி முதல் மாலை-04 மணி வரை ஆர்வமுள்ள அனைவரும் பார்வையிட்டுப் பயன்பெற முடியுமெனவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
(செ.ரவிசாந்)