சைவசமயத்திற்கு மிகவும் இக்கட்டான காலகட்டம் இது. கல்விமான்கள், பேராசிரியர்கள், உயர்பதவியிலிருக்கின்ற அதிகாரிகளென எல்லோரும் இன்று சமாளித்துப் போகிறார்கள். நீதியைச் சொல்லுங்கள். தர்மத்தைச் சொல்லுங்கள். உங்கள் பெற்ற தாய்க்கு வந்திருக்கின்ற ஆபத்துப் போலத் தான் உங்கள் சொந்த சமயத்திற்கு வந்திருக்கின்ற ஆபத்து என்பதை எல்லோரும் உணர்ந்து கொள்ளுங்கள். அதற்காக உண்மையாகக் குரல் கொடுங்கள் எனத் தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலயத் தலைவரும், சைவத்தமிழ் அறிஞருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாநகராட்சி மன்ற சைவசமய விவகாரக் குழுவினரால் நல்லூர்க் கந்தனின் பெருந்திருவிழாவை முன்னிட்டு வருடந்தோறும் வெளியிடப்பட்டு வரும் நல்லைக்குமரன் மலரின் 31 ஆவது இதழ் வெளியீட்டு விழாவும், யாழ்.விருது வழங்கும் நிகழ்வும் கடந்த வெள்ளிக்கிழமை(25.08.2023) நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன கலா மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வட- கிழக்கில் சைவசமயத்தின் அடையாளங்களை இரவோடு இரவாக மாற்றியமைத்து வருவது மிகப் பெரிய வேதனை.
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திற்கு வருகை தந்து நல்லை ஆதீனத்திற்கு வருகை தந்த போது கீரிமலையில் ஆதிச் சிவலிங்கம் மீளவும் பிரதிஷ்டை செய்யப்பட வேண்டும், சடையம்மா மடத்தை அமைக்க வேண்டும், எங்களுக்கு வந்திருக்கும் சமய நெருக்கடியை உடனடியாக நிறுத்த வேண்டும், இலங்கை இராணுவ நலன்புரிச் சங்கம் தற்போது நடாத்தி வருகின்ற தல்செவன ஹோட்டல் வளவு யாழ்ப்பாணத்தின் சுக்கிரவாரத் திருகோணச் சத்திரம் என்கின்ற ஒரு சித்தரின் சமாதியுடன் கூடிய ஒரு மடம். அந்த மடத்தை இடித்துவிட்டு மாமிசம் காய்ச்சுகின்றார்களெனக் கடிதம் கொடுத்தேன். கடிதத்தைப் பெற்றுக் கொண்ட ஜனாதிபதி விரைவில் இதற்குத் தீர்வு தருகின்றேனெனக் கூறியிருந்தார்.
ஆனால், இன்றுவரை தீர்வில்லை. இவற்றுக்கெல்லாம் என்ன தீர்வென நான் இன்று கடவுளை நோக்கித் தான் கேட்கின்றேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)