நாடாளுமன்றத்தில் வன்மத்தைக் கக்கிய சரத் வீரசேகர: தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கடும் கண்டனம்


ஆளும் தரப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் அமைச்சரும், கடற்படைத் தளபதியும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியை மனநோயாளி என விழித்து நாடாளுமன்றத்தில் வன்மத்தைக் கக்கியிருக்கின்றார். இது நாகரிக மனித குலத்தினாலும், ஜனநாயக சமூகத்தினாலும் எந்தவகையிலும் கிஞ்சித்தும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாததொரு விடயம். இதனைத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினராகிய நாங்கள் மிகவும் வன்மையாகக் கண்டிப்பதாகத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும், சட்டத்தரணியுமான க.சுகாஷ் தெரிவித்துள்ளார்.

யாழ்.கொக்குவிலில் அமைந்துள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நேற்றுப் புதன்கிழமை(23.08.2023)  பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சரத் வீரகேசரவிற்கு எதிராக உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அவரது காட்டுமிராண்டித்தனமான, ஏதேச்சதிகாரமான செயற்பாடுகளைத் தடுக்கின்ற நடவடிக்கைகள்  முன்னெடுக்கப்பட வேண்டுமெனக் கோரி நிற்கின்றோம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.