தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான கவனயீர்ப்புப் போராட்டத்தில் பலாலிப் பொலிஸார் பெரும் அடாவடி!

வலிகாமம் வடக்கில் தையிட்டிப் பிரதேசத்தில் தனியார் காணியை ஆக்கிரமித்து இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்தை அகற்றுமாறு கோரியும், அதனைச் சுற்றியுள்ள தனியார் காணிகளை உடனடியாக உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென வலியுறுத்தியும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை(31.07.2023) மாலை-04.15 மணியளவில் ஐந்தாம்  கட்டமாக மீண்டும் ஆரம்பமான கவனயீர்ப்புப் போராட்டம்

நேற்றுச் செவ்வாய்க்கிழமை(01.08.2023) மாலை-06.15 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளது.

போயா தினத்தை முன்னிட்டு நேற்று மாலை மேற்படி விகாரையில் விசேட வழிபாடுகள் நடைபெற்ற நிலையிலேயே தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் நடாத்தப்பட்டுள்ளது.    

விகாரை அமைந்துள்ள வீதியின் முகப்பிற்கு வெளியே தனியார் காணியில் நேற்று முன்தினம் மாலை தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டாவது நாளாக நேற்றுக் காலை முதல் போராட்டம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை முற்பகல்-11.30 மணியளவில் போராட்டம் இடம்பெற்ற இடத்திற்குச் சென்ற பலாலிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த  நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் சட்டத்தரணி காண்டீபன் உள்ளிட்டவர்களை நோக்கி சிங்களத்தில் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் இங்கு போராட முடியாது எனவும் எச்சரித்தடன் கைது செய்வோமெனவும் கடுமையாக மிரட்டியுள்ளார்.     


விகாரைக்குச் செல்லும் அதே வீதியின் வலதுபக்கத்தால் குறித்த விகாரைக்கு இராணுவ வாகனங்கள் செல்வதை அவதானித்த போராட்டக்காரர்களின் ஒருபகுதியினர் திடீரென அங்கிருந்து சென்று நேற்று நண்பகல்-12 மணி முதல் வீதியின் மறுபக்கமாகவும் தொடர் போராட்டத்தை மேற்கொண்டனர்.  

நேற்று மாலை-05.15 மணியளவில் விகாரையில் ஒலிபெருக்கிகள் ஒலிக்கவிடப்பட்டு 05.45 மணியளவில் வழிபாடுகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றன. இந்நிலையில் சிங்கள மக்கள் பலரும் விகாரைக்குச் செல்ல முயற்சித்த நிலையில் விகாரைக்குச் செல்லும் வீதியின் இரண்டு மருங்கிலும் சட்டவிரோத விகாரைக்கு எதிராக சிங்களம், தமிழ் மொழிகளில் பல்வேறு கோஷங்களும் எழுப்பப்பட்டுத் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டமையால் வாகனங்களில் வந்த சிங்களவர்கள் பலரும் செய்வதறியாது சுமார் 50 மீற்றருக்கு அப்பால் நின்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை-05.30 மணியளவில் மீண்டும் போராட்டம் இடம்பெற்ற இடத்திற்குப் பலாலிப் பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரி வந்திருந்தார். இந்நிலையில் விகாரைக்குச் சிங்களவர்கள் செல்வதை அனுமதிக்கும் பொலிஸார் ஏன் பொதுப் போக்குவரத்துப் பாதையைத் தடை செய்துள்ளனர்? எனக் கேள்வியெழுப்பிய போராட்டக்காரர்கள் விகாரைக்கு முன்பாக அமைந்துள்ள காணிக்குச் செல்ல முயற்சித்தனர். இதன்போது போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்குமிடையே கடும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அவ்வேளையில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனின் நெஞ்சிலே பிடித்துப் பொலிஸார் தள்ளியுள்ளனர்.

இதன்பின்னர் வீதியோரமாக நின்று போராடியவர்களின் கதிரைகளைப் பொலிஸார் பறிக்க முயன்றதுடன் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்குமிடையே கடும் முறுகல் நிலையும் ஏற்பட்டிருந்தது. அச் சந்தர்ப்பத்தில் சிங்களவர்கள் பலரும் நடந்து விகாரை நோக்கிச் சென்றனர். இதன்போது போராட்டக்காரர்கள் உரத்துக் கோஷங்கள் எழுப்பினர்.

நேற்றையதினம் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்களையும் பொலிஸார் அடிக்கடி ஒளிப்படம் மற்றும் காணொளி எடுத்து அச்சுறுத்திய வண்ணமிருந்தனர்.                

நேற்றைய கவனயீர்ப்புப் போராட்டத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும், சட்டத்தரணியுமான க.சுகாஷ், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பிரச்சாரச் செயலாளரும், சட்டத்தரணியுமான ந.காண்டீபன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணித் தலைவி திருமதி.வாசுகி சுதாகரன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.