உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு EPF/ETF நிதியங்களைப் பயன்படுத்த முனைவதற்கு எதிராக நாளை மறுதினம் திங்கட்கிழமை(28.08.2023) மதியம்-12.01 மணியளவில் யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக சில தொழிற்சங்கங்கள் இணைந்து அடையாளப் போராட்டமொன்றில் ஈடுபடவுள்ளது.
அமைச்சரவையில் 2023 ஜூலை-01 ஆம் திகதி நிறைவேற்றிக் கொள்ளப்பட்ட பரிந்துரையின் மூலமாக ஊழியர் சேமலாப நிதி - EPF மற்றும் நம்பிக்கைப் பொறுப்பு நிதி - ETF நிதிகளை உள்நாட்டு கடன் மறுசீரமைப்பிற்குப் பயன்படுத்த அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இத் தீர்மானத்தினை நடைமுறைப்படுத்த முனைவதன் மூலம் EPF/ETF நிதியங்களில் கணக்குகளைக் கொண்டுள்ள சுமார் 25 இலட்சம் உழைக்கும் வர்க்க அங்கத்தவர்களின் ஒரேயொரு ஓய்வூதியச் சேமிப்பினை அவர்களின் அனுமதியின்றிப் பயன்படுத்த அரசாங்கம் முயல்கின்றது.
பொருளாதார நிபுணர்களின் எச்சரிக்கையின் படி இந்த உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்டம் EPF/ETF கணக்குகளின் மீது சுமத்தப்படும் போது அனைத்து ஊழியர்களினதும் (EPF/ETF அங்கத்தவர்களினதும்) சேமிப்புக்களிலிருந்தும் அரைவாசித்தொகை (50%) எதிர்வரும் 16 வருட காலப்பகுதியில் இல்லாமற் போகும் அபாயம் உள்ளது. இதன் தொடர்ச்சியாக அரச ஊழியரின் ஓய்வூதிய நிதியையும் இவ்வாறு கையாள அரசாங்கம் முற்படுகின்றது. இதன்மூலம் EPF/ETF அங்கத்தவர்களுக்கு நிதிரீதியான உடனடிப்பாதிப்பும் நீண்டகாலத்தில் முழுமையாக இவ்விரு நிதிகளும் கிடைக்கபெறாத அபாய நிலையும் உள்ளது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் 28.08.2023 திங்கட்கிழமை நாடளாவிய ரீதியில் அடையாள போராட்டங்கள் பல இடங்களில் மேற்கொள்ளப்படவிருக்கின்றன. அந்தவகையில் யாழ்ப்பாணத்திலும் இங்குள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம், வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம், அகில இலங்கை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம்
பொது முகாமைத்துவ உதவியாளர் சேவைச் சங்கம், வடமாகாண சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள் சங்கம், வடமாகாணக் கால்நடைப் போதானாசிரியர் சங்கம்
ஶ்ரீ லங்கா தபால் தொலைத்தொடர்பு சேவை உத்தியோகத்தர் சங்கம், வடமாகாண அரச சாரதிகள் சங்கம், வடக்கு மாகாணக் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் தொழிற்சங்கம்
ஆகிய தொழிற்சங்கங்கள் இணைந்து யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக மதியம் உணவு இடைவேளையின் போது(12 - 01 மணி) ஒரு அடையாளப் போராட்டம் ஒன்றினை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளது.
எனவே, அதற்கு அனைவரது ஆதரவினையும் வேண்டி நிற்பதுடன் மேற்படி EPF/ETF மற்றும் ஓய்வூதிய நிதிக் கையாளல் மூலம் பாதிக்கப்படவிருக்கும் அரச, அரச மருவிய மற்றும் தனியார் துறை சார்ந்த அனைத்துத் தொழிலாளர்களையும், தொழிற்சங்கங்களையும், மக்களையும் இவ் அடையாளப் போராட்டத்தில் பங்குகொள்ளுமாறு போராட்ட ஏற்பாட்டாளர்கள் அழைத்துள்ளனர்.