02 ஆம் திகதி வரை வட-கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கனமழை வாய்ப்பு!

எதிர்வரும்- 29 ஆம் திகதி வங்காள விரிகுடாவில் அந்தமானின் வடக்கே தாழமுக்கம் ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது. இதன்காரணமாக நேற்றுப் புதன்கிழமை(27.09.2023) முதல் அடுத்தமாதம்-02 ஆம் திகதி திங்கட்கிழமை வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் பரவலாக மிதமானது முதல் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல பகுதிகளும் இந்த தாழமுக்கத்தினால் மழை பெறும் வாய்ப்புள்ளது. நாளை-29 ஆம் திகதி முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணக் கடற் பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்வது தொடர்பில் அவதானமாகவிருப்பது அவசியமாகும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.