அதிகாலை வீட்டிலிருந்து வெளியேறித் தவறான முடிவெடுத்து வயோதிபப் பெண் உயிரிழப்பு: மீசாலையில் சோகம்!

தென்மராட்சி மீசாலையைச் சேர்ந்த வயோதிபப் பெண்ணொருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (24.09.2023) அதிகாலை புத்தூர்ச் சந்திக்கு அருகில் புகையிரத தண்டவாளத்தில் தலைவைத்த நிலையில் புகையிரதம் மோதி உயிரிழந்துள்ளார்.

மேற்படி சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,   

மீசாலை வடக்குப் பகுதியைச் சேர்ந்த குறித்த வயோதிபப் பெண் இன்று அதிகாலை பாத்ரூம் சென்று வருவதாகத் தெரிவித்து விட்டுச் சென்றுள்ளார். நீண்டநேரமாகியும் அவரைக்  காணாமையால் வீட்டிலிருந்தவர்கள் அவரைத் தேடியுள்ளனர். பாத்ரூமிற்குள் சென்று பார்த்த போது அங்கும் அவரைக் காணவில்லை.

வீட்டின் கேற்றும் திறந்திருந்த நிலையில் வீட்டிலிருந்தவர்கள் சந்தேகமடைந்த நிலையில் அயற்பகுதிகளில் தேடியுள்ளனர். எனினும், அங்கும் அவரைக் காண முடியவில்லை. 

தனது தலையை ஒரு பெண் துணியொன்றினால் மூடிக் கொண்டு சென்றதை அப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் அவதானித்த போதிலும் அப் பெண் யாரென்பதை அவரால் அடையாளம் காண முடியவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.      

இதனிடையே குறித்த வயோதிபப் பெண் இன்று அதிகாலை-04.15 மணியளவில் புத்தூர்ச் சந்திக்கு அருகில் புகையிரத தண்டவாளத்தில் தனது தலையை வைத்துக் கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்ற புகையிரதத்தில் மோதுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.  

குறித்த சம்பவத்தில் மீசாலை வடக்குப் பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண் பிள்ளைகளின் தாயான திருமதி.நாகேஸ்வரி கிருஷ்ணசாமி (வயது-65) என்பவரே உயிரிழந்தவராவார். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இடம்பெற்ற மரண விசாரணைகளைத் தொடர்ந்து சடலம் இன்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் சாவகச்சேரிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, மேற்படி வயோதிபப் பெண் யுத்த காலத்தில் காலில் ஷெல் வீச்சுத் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தார். இதன்பின்னர் அவர் உடல் ரீதியாக மாத்திரமல்லாமல் உளரீதியாகவும் பாதிக்கப்பட்டிருந்தார்.குறித்த சம்பவம் மீசாலையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

(செ.ரவிசாந்)