கஜேந்திரன் எம்பியும் ஜெனிவா பயணம்


ஜெனிவாவில் தற்போது இடம்பெற்று வரும் ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக ஏற்கனவே தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஜெனிவா பயணித்திருந்த நிலையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் இன்று சனிக்கிழமை(23.09.2023) ஜெனிவா பயணமாகியுள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை(22.09.2023) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு செல்வராசா கஜேந்திரன் உரையாற்றியிருந்தார். இந் நிலையில் இன்று முற்பகல்-10.30 மணியளவில் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையமூடாகக் கஜேந்திரன் ஜெனிவா புறப்பட்டுச் சென்றார். 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் பேரவையின் தலைவர் வக்லவ் பலெக்கின்(செக் குடியரசுத் தூதுவர்) தலைமையில் கடந்த-11 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமானது. இக் கூட்டத்தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம்-13 ஆம் திகதி வரையான ஒருமாத காலத்துக்கு நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இலங்கை தொடர்பான பக்க நிகழ்வுகளில் பங்கேற்பதற்காகவும், ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்மட்டப் பிரதிநிதிகளைச் சந்திப்பதற்காகவுமே இருவரும் ஜெனிவா பயணமாகியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.       

(செ.ரவிசாந்)