யாழில் தற்கொலைத் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக நடைபயணம்

இலங்கையில் தற்போது நாளுக்கு நாள் தற்கொலைகள் அதிகரித்து வருவதைக் கருத்திற் கொண்டும், எதிர்வரும் செப்டெம்பர் மாதம்-10 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள உலக தற்கொலைத் தடுப்புத் தினத்தை முன்னிட்டும் "தற்கொலைத் தடுப்பு" தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக றோட்டறிக் கழகம் பொது அமைப்புக்கள் பலவற்றுடன் இணைந்து கடந்த செவ்வாய்க்கிழமை(29.08.2023) கொழும்பிலிருந்து ஆரம்பித்த மொத்தமாக 1333 கிலோ மீற்றர்களை உள்ளடக்கிய துவிச்சக்கரவண்டிப் பயணம் கடந்த வெள்ளிக்கிழமை(01. 09.2023) காலை-08.30 மணியளவில்  யாழ்.நகரை வந்தடைந்தது.

இந் நிலையில் நல்லூர் றோட்டறிக் கழகத்தின் ஏற்பாட்டில் "தற்கொலைத் தடுப்பு" விழிப்புணர்வு நடை பயணம் கடந்த வெள்ளிக்கிழமை மாலை-05.15 மணியளவில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு முன்பாக  ஆரம்பமாகி நல்லூர் அரசடி வீதிச் சந்திக்கு அருகில் நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து அங்கு விழிப்புணர்வுப் பொதுக் கூட்டமும் இடம்பெற்றது.விழிப்புணர்வு நடைபயணத்தின் ஒரு கட்டமாக யாழ்.நகரிலும், நல்லூர்க் கந்தசுவாமி பெருந் திருவிழாவில் கலந்து கொண்டிருந்தவர்களுக்கும் தற்கொலை தொடர்பான விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதுடன் முச்சக்கரவண்டிகளிலும் விழிப்புணர்வு ஸ்ரிக்கர்கள் ஒட்டப்பட்டன      

மேற்படி விழிப்புணர்வு நடை பயணத்தில் நல்லூர் றோட்டறிக் கழகம், சுன்னாகம் பாரம்பரிய றோட்டறிக் கழகம், யாழ்.பெனிசுலா றோட்டறட் கழகம், சுழிபுரம் றோட்டறட் கழகம், நல்லூர் பாரம்பரிய றோட்டறட் கழகம் ஆகிய கழகங்களின் நிர்வாகிகள், பிரதிநிதிகள் மற்றும் கொழும்பிலிருந்து துவிச்சக்கர வண்டிப் பயணத்தில் கலந்து கொண்டவர்களென 150 இற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  

இதேவேளை, தற்கொலை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக கொழும்பிலிருந்து துவிச்சக்கரவண்டிப் பயணமாக யாழ்.நகரை வந்தடைந்தவர்கள் நேற்று முன்தினம் சனிக்கிழமை(02.09.2023) அதிகாலை-04.45 மணியளவில் மீண்டும் யாழ்.நகரிலிருந்து புறப்பட்டு வவுனியாவைச் சென்றடைந்து திருகோணமலை, வெல்லவாய, களுத்துறை ஊடாக எதிர்வரும்-10 ஆம் திகதி மீண்டும் கொழும்பைச் சென்றடையவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. 


(செ.ரவிசாந்)