நாட்டில் மீண்டும் நெருக்கடி அதிகரிக்கும் வாய்ப்பு: மூத்த பொதுவுடைமைவாதி செந்திவேல் எதிர்வுகூறல்

2.9 பில்லியன் சர்வதேச நாணய நிதியத்தின் நிதி கிடைத்தவுடன் நாங்கள் இலங்கையைச் சொர்க்கமாக்குவோமென அரசாங்கத் தரப்பினர் கூறியிருந்த போதிலும் தற்போது இலங்கையின்  முழுக் கடனையும் இல்லாமல் செய்வதற்கான பணம் சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்படவில்லை. மாறாக ஒரு பகுதி நிதியே சர்வதேச நாணய நிதியத்தினால் தற்போது வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, அரசாங்கம் தற்போது தொடர்ந்தும் வேறு வேறு நாடுகளிடமும், நிறுவனங்களிடமும் தொடர்ச்சியாகக் கடன்களை வாங்கிக் கொண்டே வருகிறது. எனவே, எதிர்வரும் காலத்தில் நாட்டில் மீண்டும் நெருக்கடி அதிகரிக்கும் வாய்ப்புள்ளதெனப் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளரும், மூத்த பொதுவுடைமைவாதியுமான சி.கா.செந்திவேல் தெரிவித்துள்ளார்.             

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் விசேட ஊடக சந்திப்பு சனிக்கிழமை(02.09.2023) முற்பகல் கொக்குவில் சந்தியில் அமைந்துள்ள தேசிய கலை இலக்கியப் பேரவைக் கட்டடத்தில் உள்ள கட்சியின் வட பிராந்தியப் பணிமனையில் இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,  

நாட்டின் அடிப்படையான உற்பத்தியை மக்கள் ஒன்றிணைந்து பெருக்கினால் மாத்திரம் தான் தேசிய பொருளாதாரத்தைப் படிப்படியாகக் கட்டியெழுப்ப முடியுமென்பது எங்கள் நிலைப்பாடு.  

தற்போது வரிசை யுகம் இல்லாமல் செய்யப்பட்டிருந்தாலும் கூட விலைகள் குறைந்தபாடில்லை. பெற்றோல் மற்றும் டீசல் விலைகளை மீண்டும் அரசாங்கம் அதிகரித்திருக்கிறது. எரிபொருட்களின் விலை அதிகரிப்புப் பொருட்களின் விலை அதிகரிப்பிலும் தாக்கம் செலுத்துவதாயுள்ளது.

முன்னர் பொருட்களின் விலைகளைப் பல மடங்காக அதிகரித்துவிட்டு தற்போது ஐந்து ரூபா, இரண்டு ரூபாவென விலைக் குறைப்பை மேற்கொள்வது முழுக்க முழுக்க மக்களை ஏமாற்றத்திற்குள்ளாக்கும் விடயங்கள். இவ்வாறான செயற்பாடுகள் மக்களை மேலும் துன்ப நிலைக்கு இட்டுச் செல்லும் செயல்கள்.                

இந்த நாட்டில் EPF என்று சொல்லப்படும் ஊழியர் சேமலாப நிதியைப் பெறுபவர்கள் 25 லட்சம் பேர். இவர்கள் உழைக்கும் சாதாரண மக்களாகவே காணப்படுகின்றனர். தற்போது ஒரு லட்சத்து 40 ஆயிரம் தொழிலாளர்கள் தோட்டத் தொழிலாளர்களாகவுள்ள நிலையில் அவர்கள் தங்கள் வாழ்வின் இறுதிக் காலத்தில் இந்த ஊழியர் சேமலாப நிதியை நம்பித் தானிருக்கிறார்கள். இந்த ஊழியர் சேமலாப நிதியும் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு என்ற பெயரில் அரசாங்கத்தால்  கொள்ளையடிக்கப்படுவதால் அவர்களால் எதுவுமே செய்ய முடியாத அவல நிலையே காணப்படுகின்றது.

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு என்பது சர்வதேச நாணய நிதியம் சொல்லும் கட்டளைகளை நிறைவேற்றுவதாகவும், எங்களுடைய வளங்களை அந்நிய சக்திகளுக்குத் தாரை வார்ப்பதாகவுமே அமைந்துள்ளது. இவ்வாறான பொருளாதாரக் கட்டமைப்பு எந்தவிதத்திலும் எங்கள் மக்களுக்குச் சாதகமாக அமையப் போவதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.               

(செ.ரவிசாந்)