நல்லூர்க் கந்தன் விசேட திருவிழாக்களில் திருநெல்வேலி இந்து வாலிபர் சங்கத்தின் நீண்டகால அரிய பணி

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருந் திருவிழாவின் விசேட திருவிழாக்களான சப்பரம், தேர், தீர்த்தோற்சவம் உள்ளிட்ட விசேட திருவிழாக் காலப் பகுதிகளில் திருநெல்வேலி இந்து வாலிபர் சங்கம் திருநெல்வேலிச் சந்தியில் தற்காலிக தாகசாந்தி நிலையம் அமைந்து களைத்து வரும் நல்லூரான் அடியவர்கள் மற்றும் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் அரிய பணியை மேற்கொண்டு வருகிறது.         

அந்தவகையில் நல்லூரான் சப்பரத் திருவிழாவான நேற்றுச் செவ்வாய்க்கிழமை(12.09.2023) மாலை முதல் இரவு-09 மணி வரை குளிர்மை மிகு பானங்கள் வழங்கப்பட்டன.  

தேர்த் திருவிழாவான இன்று புதன்கிழமை(13.09.2023) காலை-06 மணி முதல் தேநீரும் பின்னர் குளிர்மை மிகு பானம் மற்றும் மோரும் வழங்கப்பட்டது. அத்துடன் இன்று பகல் அடியவர்களுக்கு விசேட அன்னதானமும் வழங்கப்பட்டது. 

நேற்றும், இன்றும் ஏராளமான அடியவர்கள் கலந்து கொண்டு தமது தாகம் தீர்த்துக் கொண்டமையை அவதானிக்க முடிந்தது.

 


இதேவேளை, திருநெல்வேலி இந்து வாலிபர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டுத் தற்போது நூறு வருடங்களாகியுள்ள நிலையில் நல்லூர்க் கந்தன் மஹோற்சவப் பெருவிழாவின் விசேட திருவிழாக்களில் தாகம் தீர்க்கும் பணியும் நீண்டகாலமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக மேற்படி சங்கத்தின் தலைவரும், சூழலியலாளருமான பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார். 

(சிறப்புத் தொகுப்பு:- செ.ரவிசாந்)