தையிட்டியில் சட்டவிரோத விகாரைக்காக காணிகள் அபகரிக்கும் நடவடிக்கை எதிர்ப்புப் போராட்டத்தால் இடைநிறுத்தம்!


யாழ். வலிகாமம் வடக்குத் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட திஸ்ஸ விகாரைக்காக மேலும் தனியார் காணிகளை அபகரிக்கும் நோக்கில் நில அளவீடு செய்யும் நடவடிக்கை நேற்றுச்  செவ்வாய்க்கிழமை(12.09.2023) முன்னெடுக்கப்படவிருந்த நிலையில் பொதுமக்கள், தமிழ்த்தேசிய அரசியல்வாதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளெனப் பலரும் ஒன்றுகூடி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் காணி சுவீகரிக்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.    

காணி அபகரிக்கும் நடவடிக்கையைத் தடுக்கும் நோக்கில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி எதிர்ப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. இந் நிலையில் நேற்றுக் காலை-08 மணியளவில் தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அருகில் ஒன்றுகூடிய பல்வேறு தரப்பினர் காணி அபகரிப்பு நடவடிக்கைக்கு எதிராக விகாரைக்குச் செல்லும் வீதியின் இருமருங்கிலும் நின்று அமைதியான முறையில் எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.  இந்த எதிர்ப்புப் போராட்டத்தில் தையிட்டியில் விடுவிக்கப்படாத  காணிகளின் உரிமையாளர்கள், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், தமிழ்மக்கள் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் க.அருந்தவபாலன், தமிழ்த்தேசிய மக்கள் முன்ணணியின் ஊடகப் பேச்சாளர் க.சுகாஷ், கட்சியின் பிரச்சாரச் செயலாளர் ந.காண்டீபன், கட்சியின் மகளிர் அணித் தலைவி திருமதி.வாசுகி சுதாகரன், கட்சியின் மகளிர் அணிச் செயலாளர் திருமதி.கிருபா கிரிதரன், கட்சியின் செயற்பாட்டாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் ஈடுபட்டிருந்தனர்.

பல்வேறு தரப்பினரும் ஒன்றுகூடி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டமையால் நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் விகாரை அமைந்துள்ள பகுதிக்கு வராமலேயே அளவீடு செய்யும் நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்பட்டது. இதுதொடர்பாகத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெல்லிப்பழைப் பிரதேச செயலர் ச.சிவஸ்ரீயைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போது இன்று(நேற்று) காணி அளவீடு இடம்பெறாது என உறுதிபடத் தெரிவித்தார்.

இதனையடுத்து நடைபெற்ற ஊடக சந்திப்பையடுத்து எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தமது போராட்டத்தை நிறைவு செய்து நேற்று முற்பகல்-11 மணியளவில் அங்கிருந்து கலைந்து சென்றனர்.