நல்லூரில் திலீபனின் நினைவுத் தூபியை நிரந்தரமாக அமைக்கவுள்ளதாகத் தெரிவித்து யாழில் நால்வரிடம் பொலிஸார் வாக்குமூலம்!

யாழ்.நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியைப் புதிதாக, நிரந்தரமாக அமைக்கவுள்ளதாக அரச புலனாய்வுத் தகவல் தமக்குக் கிடைக்கப் பெற்றதாகத் தெரிவித்துப் பொலிஸார் யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.

வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதவான் பொலிஸாரால் குறிப்பிடப்பட்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின்  செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தியாகதீபம் திலீபன் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுத்  தலைவர் பொன்மாஸ்டர், கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் ஆரோக்கியநாதர் தீபன் திலீசன், கட்சியின் செயற்பாட்டாளர்களான சதாசிவம் சுதாகரன், இரத்தினம் சதீஸ் ஆகியோரின் வாய்மொழிமூல வாக்குமூலத்தைப் பதிவு செய்து நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்குப் பணித்திருந்தார்.




இதற்கமைவாகப் பொலிஸார் குறித்த அறுவரில் நால்வரின் வாய்மொழிமூல வாக்குமூலத்தை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை(19.09.2023) பிற்பகல்-01 மணியளவில் சபாபதி வீதி, கொக்குவில் கிழக்கில் அமைந்துள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் வைத்துப் பெற்றுக் கொண்டனர். இதன்போது நால்வரிடமும் தலா அரை மணித்தியாலம் என்ற அடிப்படையில் இரண்டு மணித்தியாலம் வரை தனித்தனியாக வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.

இதேவேளை, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஜெனிவா அமர்வில் கலந்து கொள்வதாலும், கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் பொத்துவில் முதல் நல்லூர் வரையான தியாகதீபம் திலீபனின் நினைவுகளைச் சுமந்த  ஊர்திப் பவனியில் பங்குபற்றுவதாலும் இருவரிடமும் இதுவரை வாக்குமூலம் பெறப்படவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 


(செ.ரவிசாந்)