தங்கரதமேறி வந்தான் வண்ணமயில் வாகனன் நல்லைக் கந்தன்

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்.நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருந் திருவிழாவின் 21 ஆம் நாள் திருவிழா வேல்விமான திருவிழா (தங்கரதத் திருவிழா) இன்று ஞாயிற்றுக்கிழமை(10.09.2023) மாலை வெகுசிறப்பாக இடம்பெற்றது. 

இன்று மாலை-04.45 மணியளவில் வசந்தமண்டபப் பூசை மற்றும் கொடித்தம்பப் பூசை வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து நல்லைவேற்பெருமான் வள்ளி- தெய்வயானை சமேதரராக அலங்கார சொரூபனாக உள்வீதியில் எழுந்தருளினார். 

யாகசாலைப் பூசை வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து ஆலய முன்றலில் நிறுத்தப்பட்டிருந்த தங்கரதத்தில் நல்லை வேற்பெருமான் ஆரோகணித்தார். அதனைத் தொடர்ந்து அடியவர்களின் அரோகராக் கோஷங்களுக்கு மத்தியில் மாலை-06 மணியளவில் அழகிய தங்கரத பவனி ஆரம்பமானது. 


அந்தி சாயும் மந்த மாருதமான வேளையில் அலங்கார நாயகன் நல்லைக் கந்தன் நாயகியர் இருவருடனும் ஜொலி ஜொலிக்கும் எழில்மிகு தங்கரதம் தனில் பல்லாயிரம் அடியவர்கள் புடைசூழப் பவனி வந்த காட்சி பார்ப்போரைக் கொள்ளை கொள்ளும் அரிய  காட்சியாக அமைந்தது. 

(செ.ரவிசாந்)