நல்லூரிலிருந்து கொக்கட்டிச்சோலை நோக்கி யாத்திரை சென்றவர்களையும் விட்டுவைக்காத புலனாய்வாளர்கள்!

வரலாற்றுப் பிரசித்திபெற்ற மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத் தேர்த் திருவிழாவை முன்னிட்டு இலங்கையில் நிரந்தர அமைதி, சாந்தி, சமாதானம்,  நல்லிணக்கம், இனங்களுக்கிடையிலான பேதங்கள் நீங்கி ஒற்றுமை வளர இறையருள் வேண்டி  நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயம் நோக்கிய புனித திருத்தலத் தரிசன யாத்திரை இலங்கை முதல் உதவிச் சங்க இந்துசமயத் தொண்டர் சபையின் ஏற்பாட்டில் நேற்று வெள்ளிக்கிழமை(01.09.2023) காலை வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலய முன்றலிலிருந்து ஆரம்பமானது.

இந்நிலையில் குறித்த தரிசன யாத்திரையை ஏற்பாடு செய்தவர்களை நேற்றுக் காலை   தொலைபேசியில் தொடர்பு கொண்ட அரச புலனாய்வாளர்கள் நாங்கள் சாவகச்சேரியிலிருந்து கதைக்கின்றோம். நாங்களும் வரப் போகின்றோமெனக் கேட்டுள்ளனர். எனினும், முன்கூட்டியே பதிவு செய்தவர்களை மாத்திரம் தான் தாம் அழைத்துச் செல்கின்றோமென அவர்கள் பதிலளித்துள்ளனர்.   

அதன் பின்னரும் பல தடவைகள் நிகழ்வின் ஏற்பாட்டாளர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு குறித்த யாத்திரை நிகழ்வு தொடர்பில் அரச புலனாய்வாளர்கள் வினாவியுள்ளனர்.

இதேவேளை, மேற்படி தரிசன யாத்திரை நிகழ்வு நேற்று நல்லூரிலிருந்து ஆரம்பமாகும் போதும் பல புலனாய்வாளர்கள் யாத்திரையில் கலந்து கொண்டிருந்தவர்களைக் காணொளி மற்றும் ஒளிப்படம் எடுத்து அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டமையை அவதானிக்கக் கூடியதாகவிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.