நல்லூர்க் கந்தனின் தேர்த் திருவிழாவை முன்னிட்டு வவுனியாவிலிருந்து வேல் தாங்கிய பாத யாத்திரை ஆரம்பம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந் திருவிழாவின் தேர்த் திருவிழாவை முன்னிட்டு வவுனியா வேப்பங்குளம் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்திலிருந்து வருடம் தோறும் இடம்பெறும் வேல்தாங்கிய நடைபாத யாத்திரை இன்று வியாழக்கிழமை(07.09.2023) காலை வவுனியா வேப்பங்குளம் ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுகளுடன் பக்திபூர்வமாக ஆரம்பமானது.   

இந்த வருடம் பத்தாவது வருடமாக குறித்த நடைபாத யாத்திரை வவுனியா வேப்பங்குளம் ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய நிர்வாகி அறநெறிச் செல்வி சாமி அம்மா தலைமையில் இடம்பெறுகிறது.

மேற்படி யாத்திரை வவுனியா மன்னார் வீதி வவுனியா நகரை அடைந்து அங்கிருந்து ஏ-09 பிரதான வழியாகச் சென்று ஆலயங்களைத் தரிசித்தவாறு பூசை வழிபாடுகளிலும் கலந்து கொண்டு நல்லூர்க் கந்தனின் தேர்த் திருவிழா தினமான எதிர்வரும்- 13 ஆம் திகதி புதன்கிழமை காலை நல்லூர்க் கந்தன் ஆலயத்தைச் சென்றடையவுள்ளது. தொடர்ந்து  தேர்த் திருவிழாவிலும் அடியவர்கள் தெய்வீகப் பஜனைப் பாடல்கள் பாடியவாறு கலந்து கொள்வர். 

(செ.ரவிசாந்)