தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான ஏழாம் கட்டத் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் நிறைவுயாழ்.வலிகாமம் வடக்கின் தையிட்டிப் பிரதேசத்தில் தனியார் காணியை ஆக்கிரமித்து  அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்தை உடனடியாக அகற்றுமாறு கோரியும், அதனைச் சுற்றியுள்ள தமிழ்மக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகளை மீளவும் ஒப்படைக்க வேண்டுமென வலியுறுத்தியும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை(28.09.2023) மாலை-05.15 மணிக்கு மேற்படி விகாரை அமைந்துள்ள வீதியின் முகப்பிற்கு வெளியே ஏழாம் கட்டமாக மீண்டும் ஆரம்பமான தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் நேற்று வெள்ளிக்கிழமை(29.09.2023) மாலை-06.15 மணிக்கு  நிறைவுக்கு வந்தது.  

பூரணை தினத்தை முன்னிட்டு நேற்று மாலை மேற்படி விகாரையில் விசேட வழிபாடுகள் நடைபெற்றது. நேற்று மாலை இராணுவ வாகனங்களில் சிங்களவர்கள் பலரும் விகாரைக்குச் சென்ற நிலையில் நேற்று மாலை-03 மணி முதல் கவனயீர்ப்புப் போராட்டம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது.  

விகாரைக்குச் செல்லும் அதே வீதியின் வலது பக்கத்தால் விகாரைக்கு இராணுவ வாகனங்கள் சென்ற நிலையில் போராட்டக்காரர்களின் ஒருபகுதியினர் அங்கிருந்து சென்று  வீதியின் மறுபக்கமாகவும் நின்று போராட்டத்தை மேற்கொண்டனர். இதன்போது தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் பல கோஷங்களையும் எழுப்பி எதிர்ப்பில் ஈடுபட்டனர்.    

விகாரைக்குச் செல்லும் வீதியின் முகப்பில் பலாலிப் பொலிஸாரால் நேற்று முன்தினம் காலை முதல் வீதித் தடை ஏற்படுத்தப்பட்டிருந்தது. இந் நிலையில் நேற்று மாலை விகாரைக்குச் சென்ற வாகனங்களைப் பொலிஸார் வீதித் தடையைத் தற்காலிகமாக அகற்றிச் செல்ல அனுமதித்தமையால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் இது தொடர்பாகப் பொலிஸாரிடம் ஆக்ரோஷமாக கேள்வியெழுப்பினர். இதன்பின்னர் விகாரைக்குச் சென்றவர்கள் பல மீற்றர் தூரத்திற்கு அப்பால் இறக்கிவிடப்பட்டதுடன் ஏனையோர் விகாரைக்குச் செல்லும் வீதியின் மறுபக்கமாகவும் விகாரைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.                    

இதேவேளை, நேற்றைய கவனயீர்ப்புப் போராட்டத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பிரச்சாரச் செயலாளர் சட்டத்தரணி ந.காண்டீபன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணித் தலைவி திருமதி.வாசுகி சுதாகரன், கட்சியின் மகளிர் அணிச் செயலாளர் திருமதி.கிருபா கிரிதரன், கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் தீபன் திலீசன், கட்சியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.