இரண்டு நாட்களுக்கு முன்னர் பொத்துவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி திலீபனின் உருவப்படத்தைத் தாங்கிய ஊர்தி ஊர்வலமாக வந்த நிலையில் திருகோணமலையில் சிங்களக் காடையர்கள் ஒன்றுசேர்ந்து வாகனத்தை உடைத்ததுடன் மாத்திரமல்லாமல் அதற்குத் தலைமை தாங்கிய செல்வராசா கஜேந்திரன் மற்றும் அவருடன் வந்தவர்கள் மூர்க்கத்தனமான முறையில் சிங்களக் காடையர்களால் தாக்கப்பட்டிருக்கின்றனர். இது ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்ட சவால் மாத்திரமல்லாமல் மிக மிக கண்டிக்கப்பட வேண்டியதொரு விடயமுமாகும் என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று செவ்வாய்க்கிழமை(19.09.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இறந்து போனவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது ஜனநாயக ரீதியாக இயல்பானதொரு விடயம். எனினும், இலங்கையைப் பொறுத்தவரை காலாதி காலமாக அஞ்சலி செலுத்துவதற்குக் கூடப் போராட வேண்டியதொரு நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.
திருகோணமலையில் திலீபனின் ஊர்தியும், அதனுடன் வந்த நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டவர்களும் தாக்கப்பட்ட போது சம்பவ இடத்தில் ஒரு சில பொலிஸாரும் நின்றிருந்தனர்.
அவர்கள் விரும்பியிருந்தால் அங்கு கூடியிருந்த சிங்களக் காடையர்களை விரட்டியிருக்க முடியும்.
தற்போது குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தாலும் கூட எவ்வளவுக்கு அவை காத்திரமான நடவடிக்கைகளாக அமையுமென்ற கேள்வியுமுள்ளது. எனவே, ஜனாதிபதியும், பாதுகாப்பு அமைச்சும் இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்பில் எடுக்கக் கூடிய காத்திரமான நடவடிக்கைகள் என்ன? தமிழ்மக்களுக்கு ஒரு நீதி, சிங்கள மக்களுக்கு ஒரு நீதி என்ற கோணத்தில் பார்க்கப் போகிறார்களா? அல்லது காட்டுமிராண்டித்தனமான முறையில் நடந்து கொண்ட சிங்களக் காடையர்களுக்கு எவ்வாறான தண்டனைகளை வழங்கப் போகிறார்கள்? என்பன தொடர்பில் தமிழ்மக்களிடம் எதிர்பார்ப்புக்களுள்ளன.
இந்தச் சம்பவத்துக்கு எதிராக காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிடில் இந்த நாட்டில் ஜனநாயகம், நீதித்துறை என்பன குழி தோண்டிப் புதைக்கப்பட்டதாகவும், நீதி, நியாயம் எவற்றையும் எதிர்பார்க்க முடியாதென்ற சூழ்நிலையும் தான் ஏற்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.