கொக்குவிலில் மூன்று வாகனங்கள் மோதி விபத்து: தெய்வாதீனமாக உயிர்தப்பிய சிறுவன், இளம் யுவதி! (Video)

யாழ்.கொக்குவில் பொற்பதி வீதிச் சந்தியில் நேற்றுச் சனிக்கிழமை(02.09.2023) முற்பகல்-11.45 மணியளவில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவத்தில் மோட்டார்ச் சைக்கிளைச் செலுத்திச் சென்ற இளம் யுவதியும், மோட்டார்ச் சைக்கிளின் பின்னாலிருந்து சென்ற சிறுவனும் காயங்களின்றித் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.

 


குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

நல்லூரில் அமைந்துள்ள தனது அண்ணனின் வீட்டுக்குச் சென்று விட்டு அண்ணனின் சிறுவயதான மகனையும் அழைத்துக் கொண்டு மேற்படி யுவதி மோட்டார்ச் சைக்கிளில் ஆடியபாதம் வீதி வழியாகச் சென்று கொக்குவில் பொற்பதி வீதிச் சந்தியூடாக பொற்பதி வீதியில் அமைந்துள்ள தமது வீடு நோக்கிச் செல்வதற்காக மோட்டார்ச் சைக்கிளைத் திருப்ப முற்பட்டுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாகப் பின்புறமாக வேகமாக வந்த கார் மோட்டார்ச் சைக்கிளை மோதியுள்ளது. அதன் பின்னால் வேகமாக வந்த டொல்பின் ரக வான் காரை மோதியுள்ளது. குறித்த விபத்துச் சம்பவத்தில் மோட்டார்ச் சைக்கிளைச் செலுத்திச் சென்ற யுவதியும், சிறுவனும் நிலத்தில் விழுந்த போதிலும் காயங்கள் எதுவுமின்றித் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர்.

எனினும், விபத்து இடம்பெற்ற அதிர்ச்சியில் மோட்டார்ச் சைக்கிளைச் செலுத்திச் சென்ற யுவதி திடீர் மயக்கமுற்றுச் சரிந்துள்ளார். இந் நிலையில் அந்தவிடத்தில் கூடியவர்களால் யுவதிக்கு உடனடி முதலுதவிச் சிகிச்சை வழங்கப்பட்டது.  

சம்பவத்தில் மூன்று வாகனங்களுக்கும் சேதம் ஏற்பட்டது. சம்பவம் தொடர்பாக கோப்பாய்ப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்று விசாரணைகள் முன்னெடுத்தனர்.

இதேவேளை, கார் மற்றும் டொல்பின் ரக வானின் அதிகரித்த வேகமே குறித்த விபத்துச் சம்பவத்திற்கான காரணமெனவும், மோட்டார்ச் சைக்கிள் செலுத்திச் சென்ற யுவதி சிக்னல் போட்டு மெதுவாகத் திருப்ப முற்பட்ட போதே விபத்து இடம்பெற்றதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். 

(செ.ரவிசாந்)