யாழ்ப்பாணம் - கொக்குவில் பிரம்படி படுகொலையின் 36 ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (12) காலை 9 மணிக்கு பிரம்படி படுகொலை நினைவேந்தல் தூபியில் அனுட்டிக்கப்பட்டது.
பிரம்படி நினைவேந்தல் குழுவினரின் ஏற்பாட்டில் அப்பகுதி பொதுமக்களின் பங்களிப்புடன் இடம்பெற்ற இந்த நிகழ்வில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், பாதிப்புக்குள்ளான கிராம மக்கள், அரசியல் – சிவில் சமூக பிரதிநிதிகள் எனப் பலரும் பங்கேற்று தூபிக்கு மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தி, பின் தீபங்கள் ஏற்றியும் அஞ்சலி செலுத்தினர்.
1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11 மற்றும் 12 ஆகிய இரு தினங்களில் இந்திய இராணுவத்தினரால் “ஒப்பரேசன் பவன்” நடவடிக்கை மூலம் மிகவும் மோசமான முறையில் துப்பாக்கியால் சுட்டும், உயிருடன் வீதியிலும் ரயில் தண்டவாளத்திலும் குப்பறப்படுக்க வைத்துக் கவச வாகனங்களினால் நசித்தும் 50 க்கும் மேற்பட்ட தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்திய இலங்கை ஒப்பந்தம் 1987 ஆம் ஆண்டு யூலை மாதம் 29 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட பின்னர் வடக்குக் கிழக்குத் தமிழர் தாயகப் பகுதிகளுக்கு அமைதிப்படை எனும் பேரில் வந்திறங்கிய இந்திய இராணுவத்தினரை தமிழ்மக்கள் தமது மீட்பர்களாக கருதிக்கொண்டிருந்த நேரத்தில் இந்திய இராணுவத்தின் கோர முகத்தை தமிழ்மக்களுக்கு காட்டிய முதல் சம்பவமாகவும் வரலாற்றில் இந்த பிரம்படிப் படுகொலைச் சம்பவம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.