கோப்பாய் ஆசிரியர் கலாசாலை என்ற நாமம் உருமாற்றம் பெறாமல் தொடர வேண்டும்: செந்தமிழ்ச் சொல்லருவி லலீசன் வலியுறுத்து!


ஆசிரியர் கல்லூரிகள் சில சில மாற்றங்களைச் சந்தித்த வண்ணமுள்ளது. தேசிய கல்வியியற் கல்லூரிகளெல்லாம் பல்கலைக்கழகங்களாக உருமாற்றம் பெறுகின்ற கட்டத்திலிருக்கின்றது. எங்கள் கலாசாலையும் உயர்நிலைக் கல்வியை வழங்குகின்ற நிலையில் எப்படி கலிபோர்னியா, ஒக்ஸ்போர்ட் ஆகிய பல்கலைக்கழகங்கள் பெயர் மாறாமல் தொடர்கின்றனவோ அதேபோலக் கோப்பாய் ஆசிரியர் கலாசாலை என்ற நாமம் உருமாற்றம் பெறாமல் தொடர வேண்டுமெனக் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முதல்வர் ச.லலீசன் வலியுறுத்தியுள்ளார்.

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூற்றாண்டு நிறைவு விழா நேற்றுப் புதன்கிழமை(11.10.2023)  மேற்படி கலாசாலையின் ரதிலட்சுமி மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

 கோப்பாய் ஆசிரியர் கலாசாலை நீண்டகால பாரம்பரியத்தைக் கொண்டது. பண்டிதர் சி.கணபதிப்பிள்ளை முதல் வீரமணி ஐயா ஈறாகப் பல கல்வியிலாளர்களைப் பிரசவித்த பெருமைக்குரியது. இலங்கையில் மிக மூத்த ஆசிரியர் கலாசாலைத் தாயாக எங்கள் கலாசாலை விளங்குகிறது.        

எங்கள் கலாசாலையின் முன்னாள் முதல்வர்களும், கலாசாலைக்காக வாழ்ந்தவர்களும் இங்கே

வருகை தந்திருக்கிறார்கள். அத்தனை பேரின் பாதங்களையும் நான் பணிந்து கொள்கின்றேன். அவர்கள் காட்டிய வழியில் தான் கோப்பாய் ஆசிரியர் கலாசாலை இதுவரை காலமும் பயணித்து வந்திருக்கிறது.

எங்கள் கலாசாலையின் பெருமையைக் காக்கின்ற வகையில் கடந்த ஜனவரி மாதம் நூற்றாண்டு விழாவின் முதல் நிகழ்வு வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த வருடம் முழுவதும் மிகச் சிறப்பான நிகழ்வுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன.

இவையெல்லாம் இறைவனுடைய சித்தம், வழிகாட்டலில் மிகவும் உன்னதமான நிலையில்  நாங்கள் பயணிக்கின்றோம். இந்த உன்னதமான நிலை தொடர வேண்டுமென்பது தான் எங்கள் வேண்டுகோள், அவா என்கின்ற விண்ணப்பத்தைச் சமர்ப்பித்துக் கொண்டு நூற்றாண்டுக் காலத்தில் கலாசாலையின் முதல்வராகப் பதவி வகிக்கக் கிடைத்தமை கூட இறைவன் எனக்குத் தந்த வரம் எனவும் அவர் மேலும் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.   

(செ.ரவிசாந்)