யாழ். போதனா மருத்துவமனைப் படுகொலையின் 36 ஆவது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு


யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் 1987 ஆம் ஆண்டு 21, 22 ஆம் திகதிகளில் இந்திய இராணுவத்தால் மிலேச்சத்தனமான முறையில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டவர்களின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நேற்றுச் சனிக்கிழமை(21.10.2023) முற்பகல்-10.30 மணிக்கு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் முன்பாக அனுஷ்டிக்கப்பட்டது.


துப்பாக்கிச் சூட்டில் படுகொலை செய்யப்பட்ட மேற்படி மருத்துவமனையின் பணியாளரின் துணைவியார் வரதராஜன் சிவபாக்கியம் பொதுச் சுடர் ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து குறித்த சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்ட மருத்துவர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்களை நினைவுகூர்ந்து ஒருநிமிட மெளன அஞ்சலியும் அதனைத் தொடர்ந்து மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது. தொடர்ந்து  அரசியல் விமர்சகரும், தமிழ்த்தேசியப் பற்றாளருமான மு.ஈழத்தமிழ்மணி கலந்து கொண்டு நினைவுரை ஆற்றினார்.