பலஸ்தீன மக்களுக்கு எதிரான இன அழிப்புத் தாக்குதலைக் கண்டித்து யாழ்.நகரில் ஆர்ப்பாட்டம்


பலஸ்தீன மக்களுக்கு எதிரான இன அழிப்புத் தாக்குதலைக் கண்டித்து சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் நேற்றுச் சனிக்கிழமை(21.10.2023) முற்பகல்-10 மணி தொடக்கம் முற்பகல்-11 மணி வரை யாழ்.பிரதான பேருந்துத் தரிப்பிட நிலையத்திற்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த்தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ந.ஸ்ரீகாந்தா, தமிழ்த்தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத் தலைவர் பொ.ஐங்கரநேசன், அரசியல், சமூகச் செயற்பாட்டாளர் க.அருந்தவபாலன், புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா.செந்திவேல், கட்சியின் வடபிராந்தியச் செயலாளர் கா.செல்வம் கதிர்காமநாதன், கட்சியின் வன்னி மாவட்டங்களின் செயலாளர் என்.பிரதீபன், முன்னாள் யாழ்.மாநகரசபை உறுப்பினர்களான எம்.எவ்.நிபாஹிர், சரபுல் அனாம், மூத்த எழுத்தாளர் க.தணிகாசலம், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பினர், பெண் விடுதலைச் சிந்தனை அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு ஒடுக்கப்பட்ட பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும், இஸ்ரேலிய மிலேச்சத்தனமான தாக்குதல்களை நிறுத்துமாறு கோரியும் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.    


  

குறித்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் நிறுத்து! நிறுத்து! காஸாத் தாக்குதல்களை உடனே நிறுத்து!!, அழிக்காதே! அழிக்காதே! பலஸ்தீனத்தை அழிக்காதே!, அன்று முள்ளிவாய்க்கால் இன்று காஸா! உள்ளிட்ட பல கோஷங்களை எழுப்பியும், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளிலான பல்வேறு  சுலோகங்களைத் தமது கைகளில் ஏந்தியும் கடும் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

இதேவேளை, ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாகப் பலஸ்தீன மக்களுக்கு ஆதரவான துண்டுப் பிரசுரங்களும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டமை  இங்கு குறிப்பிடத்தக்கது. 

(செ.ரவிசாந்)