ஒருநாள் கடையடைப்புப் போராட்டம் வெற்றியைத் தராது: ஐங்கரநேசன் தெரிவிப்பு

போராட்ட வடிவத்தை மாற்றி சந்திக்குச் சந்தி, முனைக்கு முனை என ஒரேநாளில் வெவ்வேறு இடங்களில் 100 பேர், 500 பேர் எனத் திரண்டு எங்களின் எதிர்ப்பினை வெளிப்படுத்தினால் அது சர்வதேசத்தின் அல்லது அரசின் கவனத்தை ஈர்க்கும். இதனை விடுத்து எங்களின் ஒருநாள் கடையடைப்புப் போராட்டம் எந்தவொரு வெற்றியையும் தராது என்பது தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் நிலைப்பாடு எனத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் சமகால அரசியல் உரையரங்கு நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை(15.10.2023) மாலை நல்லூர் இளங்கலைஞர் மன்ற மண்டபத்தில் இடம்பெற்ற போது நிகழ்விற்குத் தலைமை தாங்கி உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,          

ஹர்த்தால் அல்லது கடையடைப்பு அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்பினைக் காட்டும் ஒரு போராட்ட வடிவம்.  ஆயுதப் போராட்டம் முளைவிடுவதற்கு முன்னதாகத் தமிழ்த்தேசிய இனம் தன்னுடைய ஆரம்பக் கட்டப் போராட்ட வடிவமாக வடிவமைத்த விடயங்களில் ஹர்த்தாலும் ஒன்று. ஆனால், இந்தக் ஹர்த்தால் அரசாங்கத்திற்குச் சொல்லும் செய்தி என்ன?, அரசாங்கத்திற்குஏற்படுத்தப் போகும் பொருளாதார வீழ்ச்சி என்ன?, இதனூடாகச் சர்வதேசத்திற்குச் சொல்லப் போகும் செய்தி என்ன?, எம் மத்தியிலும் கட்சிகளிருக்கின்றன என்பதை மாத்திரம் தான் சொல்லப் போகின்றோமா?

சில தினங்களாகப் பல வர்த்தக நிலைய உரிமையாளர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினேன். அப்போது ஹர்த்தால் தினத்தில் நீங்கள் உங்கள் பணியாளர்களுக்கு வேதனம் கொடுப்பீர்களா? எனக் கேட்ட போது எப்படி சேர் வழங்குவது? எனச் சங்கடத்துடன் திருப்பிக் கேட்டார்கள்.    

பத்திரிகைகளின் உரிமையாளர்கள் அரசியல்வாதிகளாக இருக்கின்றார்கள். கூட்டுறவுச் சங்கங்களின் முகாமைத்துவத்தில், தலைமைப் பொறுப்பிலிருக்கின்றவர்கள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளாகவிருக்கின்றார்கள். வணிக சங்கங்களின் பிரதிநிதிகள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளாக, தேர்தலில் போட்டியிட்டவர்களாக, கட்சிகளின் அமைப்பாளர்களாக இருக்கின்றார்கள். ஆகவே, இவர்கள் கட்சித் தலைமைக்குக் கட்டுப்படுவார்களே தவிர மக்களின் குரலாக ஒலிக்கமாட்டார்கள். எனவே, ஹர்த்தால் நடக்கும். 

ஆனால், மனமறிந்து மக்கள் தாங்களும் பங்கேற்கின்றோமென இன்றைய சாப்பாட்டை ஒருநாள் போராட்டத்திற்காக இழப்போம் என்று சொல்லி யாராவது குடிமகன் முன்வருவாரா? என்றால் நிச்சயமாக இல்லை     

ஒரு வேளை உணவுக்கே ஒருநாள் கூலிப் பணம் கொண்டு வந்தால் மாத்திரம் தான் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் பலரின் வீடுகளில் அடுப்பெரியும் எனும் நிலை காணப்படும் போது பகட்டுக்காக, இருந்த நிலையிலேயே போராட்டம் நடாத்த வேண்டுமென்பதற்காக, யார் அறிவித்தாலும் ஹர்த்தால் ஓரளவுக்கு வெற்றிகரமாக இடம்பெறும் என்பதால் அதற்கு உரிமை கோருவதற்காக மாத்திரம் தான் ஹர்த்தாலை நடாத்துகின்றார்கள் எனவும் அவர் குற்றம் சாட்டினார்.    

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியாகவிருந்த ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகவும், நீதித்துறையின் சுயாதீனத்தை வலியுறுத்தியும் எதிர்வரும்-20 ஆம் திகதி வடக்கு கிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் ஹர்த்தாலை முன்னெடுப்பதெனத் தமிழ்த்தேசியக் கட்சிகள் கூட்டாகத் தீர்மானித்து அண்மையில் அறிவிப்பு வெளியிட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.  

(செ.ரவிசாந்)