யாழில் நீதி தேவதையிடம் நீதி வேண்டி மண்டியிட்ட போராட்டக்காரர்கள்: மனங்களை நெகிழவைத்த காட்சி

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு விடுக்கப்பட்ட உயிர் அச்சுறுத்தலைக் கண்டித்தும், அவரது பதவி விலகலுக்கு நீதி கோரியும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்த மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டப் பேரணி நேற்றுப் புதன்கிழமை(04.10.2023) யாழில் நடைபெற்றது. இதன்போது நீதி தேவதையிடம் போராட்டக்காரர்கள் நீதி வேண்டி மண்டியிட்ட காட்சி பலரது மனங்களையும் நெகிழ வைத்துள்ளது.      

கொக்குவில் சந்தியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சட்டத்தரணிகள் உள்ளிட்ட போராட்டக்காரர்கள் நேற்று முற்பகல்-10.30 மணிக்குத் திடீரென்று நீதி தேவதையின் உருவச் சிலைக்கு கறுத்த துணி கட்டி, நீதி தேவதையின் கையிலுள்ள தராசு ஒரு பக்கமாகத் தாழ்ந்திருக்கக் கூடியவாறு காட்சிப்படுத்தி, கைகள் இரண்டையும் நீட்டி, நீதி வேண்டி நீதி தேவதையின் முன்பாக மண்டியிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

குறித்த காட்சி தற்போது இலங்கையில் நீதித் துறையின் சுயாதீனத் தன்மை கேள்விக்குட்படுத்தப்பட்டிருப்பதைப் படம் போட்டுக் காட்டும் வகையில் அமைந்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.   .