குப்பிழான் சிவபூமி ஆச்சிரமத்தில் களைகட்டவுள்ள வாணி விழா

குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தின் வாணி விழா எதிர்வரும் சனிக்கிழமை(21.10.2023) மாலை-03 மணி முதல் ஆச்சிரமத்தின் சிவபூமி அரங்கில் இடம்பெறவுள்ளது.

சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி.ஆறு.திருமுருகன் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் வாழ்நாள் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் என்.சண்முகலிங்கன், இளைப்பாறிய கிராம சேவகர் சோ.பரமநாதன் ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்து கொள்ளவுள்ளனர்.

நிகழ்வில் வலம்புரிப் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும், அதிபருமான நா.விஜயசுந்தரம் சிறப்புரையையும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமஸ்கிருதத் துறைத் தலைவர் சிவஸ்ரீ ம.பாலகைலாசநாத சர்மா ஆசியுரையையும் நிகழ்த்துவர்.    

மேற்படி நிகழ்வில் ஈழநல்லூர் நாதஸ்வர வித்துவான் ஏ.பி.சுப்பசாமியின் பேரப் பிள்ளைகளான சிறுவர்களின் விசேட நாதஸ்வர- மேளக் கச்சேரியும், பண்ணிசைக் கச்சேரியும், அறநெறி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெறும். 

இதேவேளை, வாணி விழா நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு நிகழ்வு சிறக்க ஒத்துழைப்பு வழங்குமாறு சிவபூமி ஞான ஆச்சிரமத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர். 

(செ.ரவிசாந்)