தையிட்டியில் போராட்டக்காரர்களிடம் மன்னிப்புக் கேட்டுத் திரும்பிய குழு!

 


தையிட்டிப் பிரதேசத்தில் தனியார் காணியை ஆக்கிரமித்து  அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்தை உடனடியாக அகற்றுமாறு கோரியும், அதனைச் சுற்றியுள்ள தமிழ்மக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகளை மீளவும் மக்களிடம் ஒப்படைக்க வேண்டுமென வலியுறுத்தியும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் ஏழாம் கட்டமாகத் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் நிறைவுறும் தறுவாயில் கடந்த வெள்ளிக்கிழமை(29.09.2023) மாலை வெளியிடத்திலிருந்து இளைஞரொருவர், சிறுவர்கள் மற்றும் பெண்களை உள்ளடக்கிய தமிழ்மக்கள் சிலர் அடங்கிய குழுவொன்று விகாரை நோக்கி நடந்து சென்றுள்ளனர்.

இதன்போது விகாரை அமைந்துள்ள வீதியின் முகப்பிற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போராட்டக்காரர்கள் அவர்களை இடைமறித்து விகாரைக்கு ஏன் செல்கிறீர்கள்? என வினாவியுள்ளனர். அப்போது விகாரையைப் பார்ப்பதற்காகச் செல்வதாக அவர்கள் பதிலளித்துள்ளனர். இதனைக் கேட்டுப் போராட்டக்காரர்களில் சிலர் சினமடைந்து அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

எனினும், போராட்டத்திற்குத் தலைமையேற்றிருந்தவர்களின் தலையீட்டினால் குறித்த நபர்களுக்குத் தையிட்டி விகாரைக்கு எதிரான தொடர்ச்சியான போராட்டம் தொடர்பிலும், அதன் நியாயப்பாடு தொடர்பிலும் எடுத்துக் கூறப்பட்டது. இதனையடுத்துத் தாம் இதுதொடர்பில் அறிந்திருக்கவில்லை எனத் தெரிவித்த அவர்கள் போராட்டக்காரர்களிடம் மன்னிப்புக் கேட்டு விட்டு அங்கிருந்து திரும்பிச் சென்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.