சிங்களப் புத்திஜீவிகள், சிவில் அமைப்புக்கள் தமிழ்மக்களுக்காக குரல் கொடுக்க முன்வர வேண்டும்!


தற்போது முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு ஏற்பட்டிருக்கின்ற நிலைமை நாளை உங்களுடைய சிங்கள நீதிபதிகளுக்கும் ஏற்படும். அந்த நேரத்தில் சிலவேளைகளில் இலங்கை சீனாவினதோ அல்லது வேறு நாடுகளினதோ காலணித்துவ நாடாக மாறியிருக்கும். எனவே, இந்தச் சந்தர்ப்பத்திலாவது சிங்களப் புத்திஜீவிகளும், சிவில் அமைப்புக்களும்  தமிழ்மக்களின் நியாயமான அபிலாசைகளையும், கோரிக்கைகளையும் புரிந்து கொண்டு தமிழ்மக்களுக்காகக் குரல் கொடுக்க முன்வர வேண்டுமெனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும், சட்டத்தரணியுமான க.சுகாஷ் வலியுறுத்தியுள்ளார்.     

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு விடுக்கப்பட்ட உயிர் அச்சுறுத்தலைக் கண்டித்தும், அவரது பதவி விலகலுக்கு நீதி கோரியும் இன்று புதன்கிழமை(04.10.2023) தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் ஏற்பாட்டில் யாழில் மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்ட நிலையில் அதற்குப் பூரண ஆதரவு தெரிவித்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று யாழ்.கொக்குவில் பூநாறி மடத்தடிச் சந்திக்கு அருகில் வாயைக் கறுப்புத் துணியால் கட்டிக் கண்டனப் போராட்டமொன்றை முன்னெடுத்தனர். 

இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,      

ஐக்கியநாடுகள் சபை போன்ற பன்னாட்டு மன்றங்கள் இனியும் காலதாமதமில்லாமல் ஈழத்தில் நடந்த இனப்படுகொலைகளுக்கு ஒரு சர்வதேச விசாரணையை ஆரம்பிக்க வேண்டும். 

நீதிபதியே இந்த நாட்டில் வாழ முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கும் நிலையில் சாதாரண மக்களின் நிலை என்ன? என்பதை அனைவரும் சிந்தித்துப் பாருங்கள் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.