கோண்டாவில் கிழக்கு ஶ்ரீ அற்புதநர்த்தன விநாயகர் சனசமூக நிலையத்தினதும் குமரன் விளையாட்டுக்கழகத்தினும் ஆதரவில் இயங்கும் குட்டிச்சுட்டி முன்பள்ளி, அகம் குழந்தைகள் பகல் நேர காப்பக மாணவர்களின் வருடாந்த சித்திர ஆக்க கண்காட்சி -2023 நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை(27.10.2023) மேற்படி முன்பள்ளியின் பிரதான மண்டபத்தில் மிகவும் சிறப்புற நடைபெற்றது.
கோண்டாவில் கிழக்கு ஸ்ரீ அற்புதநர்த்தன சனசமூக நிலையத் தலைவர் து.சுதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் யாழ்.கோண்டாவில் றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலையின் அதிபர் கணபதிப்பிள்ளை நித்தியானந்தன் பிரதம விருந்தினராகவும், ஓய்வுநிலை அதிபர் கணிதச்சுடர் சண் வாமதேவன், ஊடகவியலாளர் செல்வநாயகம் ரவிசாந் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.
சிறார்களின் நூற்றுக்கணக்கான கண்கவர் சித்திர ஆக்கங்களும், கலைநயத்துடன் கூடிய கைவினைப் பொருட்களும் இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தது.
குறிப்பாக இந்தக் கண்காட்சியில் வீட்டுக் கழிவுகளிலிருந்து ஆக்கப்பட்ட பல கைவினைப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இயற்கைக்கு அதிக முக்கியத்துவம் வழங்குவதாக ஆக்கங்கள் இடம்பெற்றிருந்தன.
மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தியும், ஆரோக்கியமான உணவுகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆக்கங்கள் பலரினதும் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.
இதேவேளை, மேற்படி கண்காட்சியை முன்பள்ளிச் சிறார்கள், பெற்றோர்கள் மற்றும் ஆர்வலர்கள் எனப் பலரும் ஆர்வத்துடன் பார்வையிட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
(சிறப்புத் தொகுப்பு:- செ.ரவிசாந்)
.