தமிழரசுக் கட்சியின் கோப்பாய்த் தொகுதிக் கிளையின் புதிய தலைவரானார் கபிலன்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கோப்பாய் தொகுதிக் கிளையின் புதிய நிர்வாகத் தெரிவுக் கூட்டம் நேற்றுச் சனிக்கிழமை(14.10.2023) மாலை-04.30 மணியளவில் நீர்வேலி மாதர் சங்க மண்டபத்தில் இடம்பெற்றது.

தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா முன்னிலையில் கட்சியின் பொருளாளர் பெ.கனகசபாபதி தலைமையிலும் கட்சியின் மூத்த தலைவர்களான சீ.வீ.கே.சிவஞானம், எஸ்.எக்ஸ்.குலநாயகம் ஆகியோரின் பங்குபற்றுதலுடனும் குறித்த நிர்வாகத் தெரிவுக் கூட்டம் நடைபெற்றது.      


வெள்ளிக்கிழமை காலமான மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் மூத்த உபதலைவருமான பொன்.செல்வராசாவுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து கூட்டம் ஆரம்பமானது.

புதிய நிர்வாகத் தெரிவில் முதலில் தலைவர் தெரிவு செய்யப்பட சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இதன்படி, அச்சுவேலி தெற்கு வட்டாரத்தைச் சேர்ந்த  வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் ம.கபிலன் மற்றும் தமிழரசுக் கட்சியின் கோப்பாய்த் தொகுதிக் கிளையின் முன்னாள் செயலாளர் சி.திருநாவுக்கரசு ஆகிய இருவரின் பெயர்கள் பிரேரிக்கப்பட்டன. வாக்கெடுப்பின் அடிப்படையில் கபிலன் வெற்றியீட்டித் தலைவராகத் தெரிவாகினார்.

புதிய நிர்வாகத் தெரிவிற்கமைய முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் அ.பரஞ்சோதி செயலாளராகவும், வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ந.கஜேந்திரகுமார் பொருளாளராகவும், புத்தூர் வட்டாரத்தைச் சேர்ந்த அ.கமலறேகன் உபதலைவராகவும், கட்சியின் வளலாய் மூலக்  கிளையின் தலைவர் இ.கலைமோகன் உப செயலாளராகவும், மூன்று பெண்கள் உட்பட 10 பேர் நிர்வாகசபை உறுப்பினர்களாகவும் தெரிவுசெய்யப்பட்டனர்.