யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இன்று ஞாயிற்றுக்கிழமை (15.10.2023) அதிகாலை முதல் காலை-09.45 மணி வரை தொடர் மழைவீழ்ச்சி பதிவானது.
தொடர் மழையால் மாவட்டத்தின் தாழ்வான பல பகுதிகளிலும், வீதிகள் பலவற்றிலும் மழை வெள்ளநீர் தேங்கி நின்றமையை அவதானிக்க முடிந்தது. மழையுடனான காலநிலையால் நிலவி வந்த வெப்பமுடனான காலநிலை தணிவடைந்தது.
இதேவேளை, வங்காள விரிகுடாவிலும், அரபிக் கடலிலும் இரண்டு காற்றுச் சுழற்சிகள் உருவாகியுள்ளன. வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றுச் சுழற்சியானது நாளை-16 ஆம் திகதி தாழமுக்கமாக உருவாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் காற்றுச் சுழற்சி இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கு அண்மித்திருப்பதால் அடுத்த சில நாட்களுக்கு வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளும் மேக மூட்டத்துடன் காணப்படும் என்பதுடன் அடுத்த சில நாட்களுக்கு பரவலாக மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.