தமிழக திமுக அரசின் தமிழர் விரோதச் செயலுக்குத் தமிழ்த்தேசியப் பண்பாட்டுப் பேரவை கடும் கண்டனம்!நாடு கடந்த தமிழீழ அரசினால் 15.10.2023 ஒழுங்கு செய்யப்பட்ட "இலங்கை மலையகத் தமிழர்களின் 200  ஆண்டுகளின் துயரம்" எனத் தலைப்பிடப்பட்ட கருத்தரங்கிற்குத் திமுக தலைமையிலான தமிழ்நாட்டு அரசு அனுமதி மறுத்திருப்பதை தமிழ்த்தேசியப் பண்பாட்டுப்  பேரவை வன்மையாகக் கண்டித்துள்ளது.

இதுதொடர்பாகத் தமிழ்த்தேசியப் பண்பாட்டுப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ்.நிஷாந்தன் ஊடகச் செய்திக் குறிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த ஊடகச் செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது,     

ஈழத்தில் 2009 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுத மௌனிப்புக்குப் பின்னர் ஈழத்தமிழர்களது  இன விடுதலைப் போராட்டத்தை அரசியல் ரீதியாக சர்வதேச அரங்கில் முன் நகர்த்திக் கொண்டிருக்கும் ஒரு வலுவான அமைப்பாக இன்றுவரை நாடு கடந்த தமிழக அரசாங்கமே செயற்படுகின்றது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் எவ்விதமான செயற்பாடுகளையும் ஈழத்தில் செய்யவிடாது சிறீலங்கா அரசாங்கம் பாரிய தடைகளை விதித்திருக்கின்றது. இந்த அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளர்களும் நாட்டிற்குள் வரமுடியாதபடி தடை உத்தரவு போட்டிருக்கின்றது. இதற்கான பிரதான காரணம்  சிறீலங்கா அரசுக்கு அரசியல் ரீதியாகப் பல வழிகளிலும் சர்வதேச அரங்கில் பாரிய அழுத்தங்களை இன்றுவரை பிரயோகிக்கின்ற ஓர் பலமான அமைப்பாக நாடு கடந்த தமிழீழ அரசு செயற்படுகின்றமையே காரண்மாகும்

இவ்வாறான  சூழ்நிலையில் இன்று இருக்கக்கூடிய திமுக தலைமையிலான தமிழக அரசு ஈழத் தமிழர்கள் விவகாரங்களில் அன்று தொடக்கம் இன்று வரை  எதிராகவே தமிழர் விரோதப் போக்கில்  செயல்பட்டு வருகின்றது. இதற்குச் சான்றாக  2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இறுதிக் கட்ட யுத்தம் ஓர் உதாரணமாகும்

நாடு கடந்த தமிழீழ அரசின் செயற்பாடுகள் தமிழகத்தில் தொடரும். தொடர வேண்டும். இதற்கு எதிராக தமிழகத்தில் எந்தக் கட்சிகள்  தடை போட்டாலும் அத் தடைகளை அவர்கள் திருப்பிப் பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லையேல் தடைகள் அனைத்தும் தமிழக தொப்புள் கொடி உறவுகளால் அனைத்து  வழிகளாலும் எதிர்க்கப்படும் என்பதனை தமிழ்நாடு அரசுக்கு மிகத் தெளிவாக வலியுறுத்துவதுடன் திமுக தலைமையிலான தமிழ்நாட்டு அரசின் தமிழர் விரோதச் செயல்களையும் தமிழ்த்தேசியப் பண்பாட்டுப் பேரவை வன்மையாகக் கண்டிக்கின்றது எனவும் அந்த ஊடகச் செய்திக் குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.