கோப்பாயில் பண்பாட்டுப் பெருவிழா: இளம், மூத்த கலைஞர்களுக்கு விருது

வடமாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தேசிய ஒருமைப்பாடுகள் மற்றும் நல்லிணக்க அமைச்சு ஆகியவற்றின் அனுசரணையில் வலிகாமம் கிழக்கு பண்பாட்டுப் பேரவையும், கோப்பாய்ப் பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய பண்பாட்டுப் பெருவிழா-2023 அண்மையில் மேற்படி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

கோப்பாய்ப் பிரதேச செயலாளரும், பண்பாட்டுப் பேரவைத் தலைவருமான திருமதி.சுபாஜினி மதியழகன் தலைமையில் இடம்பெற்ற விழா நிகழ்வில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் பிரதம விருந்தினராகவும், வடமாகாணப் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் திருமதி.லாகினி நிருபராஷ் சிறப்பு விருந்தினராகவும், யாழ்.மாவட்டச் சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் திருமதி. சுகுணாளினி விஜயரத்தினம், கலாபூஷணம் விசுவாசம் ஜெகநாதன் ஆகியோர் கெளரவ விருந்தினர்களாகவும் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த விழா நிகழ்வில் 2023 ஆம் ஆண்டின் செம்புல இளங்குரிசில் விருது இளங்கலைஞர்களுக்கும், செம்புலக் குரிசில் விருது மூத்த கலைஞர்களுக்கும் வழங்கிக் கெளரவமளிக்கப்பட்டது. மாண்புறு மாணவர் சமுதாய நிகழ்ச்சித் திட்டத்தின் 2022 ஆம் ஆண்டு பிரதேச மட்டப் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில் வழங்கலும், பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.