திருச்செந்தூர் கந்தசஷ்டி காலப் பகுதியில் செஞ்சொற்செல்வரின் சொற்பொழிவு

 


வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்கும் தென்னிந்தியாவின் திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் கந்தசசஷ்டி விரத திருவிழா கடந்த-13 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகியது. 

இவ் ஆலயத் திருவிழாக் காலப் பகுதியில் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலயத் தலைவரும், பிரபல சைவத்தமிழ்ச் சொற்பொழிவாளருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி. ஆறு.திருமுருகன் யாழிலிருந்து தமிழ்நாட்டிற்கு விஜயம் செய்து தொடர்ந்து ஐந்து  தினங்கள் சிறப்புச் சொற்பொழிவு ஆற்றினார். 

கந்தசஷ்டி விரத காலத்தின் ஆறு நாட்களிலும் தினம் தோறும் தமிழகத்தின் பல அறிஞர்கள் கந்தசஷ்டித் திருவிழா கலையரங்கத்தில் காலை-08 மணியிலிருந்து இரவு-10 மணி வரை ஆன்மீகம் சார்பான பல்வேறு விடயங்களில் தொடர் சொற்பொழிவுகள் நிகழ்த்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 

அந்த வகையில் யாழிலிருந்து சென்ற செஞ்சொற்செல்வர் கலாநிதி. ஆறு.திருமுருகன் திருச்செந்தூர் முருகன் ஆலயக் கந்தசஷ்டித் திருவிழாவின் ஆரம்பநாளான கடந்த திங்கட்கிழமை (13.11.2023) பிற்பகல்-01 மணியளவில் "உலகெங்கும் முருக வழிபாடு" எனும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு ஆற்றினார். இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை (14.11.2023)  "யாழ்ப்பாணமும் முருக வழிபாடும்" எனும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார்.

இதேவேளை, கடந்த புதன்கிழமை(15.11.2023) "ஈழத்துச் சித்தர்களும் முருக வழிபாடும்" எனும் தலைப்பிலும்,  வியாழக்கிழமை(16.11.2023) "கந்தன் வழிபாடும் காவடி மரபும்" எனும் தலைப்பிலும், நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை(17.11.2023) அகம் காக்கும் விரதம் எனும் தலைப்பிலும் சிறப்புச் சொற்பொழிவுகள் ஆற்றினார். 

(செ.ரவிசாந்)