இலங்கையின் ஒட்டுமொத்த ஆட்சி முறைமை மாற்றியமைக்கப்பட வேண்டும். இலங்கையில் வாழ்கின்ற பன்முகத்துவம் வாய்ந்த மக்களுக்கும் பொறுப்புச் சொல்லும் வகையில் அது அமைய வேண்டுமெனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
கொழும்பு கொள்ளுப்பிட்டியில் வெள்ளிக்கிழமை(17.11.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகவியலாளரொருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தவிர்க்க முடியாததொரு நிலையில் தான் இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு மகிந்த ராஜபக்ச, கோட்டபாய ராஜபக்ச, பஸில் ராஜபக்ச ஆகியோர் தான் காரணமென உயர்நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இலங்கையின் சரித்திரத்திலேயே இல்லாத பொருளாதார வீழ்ச்சிக்கும், வங்குரோத்துக்கும் காரணமானவர்கள் சம்பந்தமாகப் பெயர்களைக் குறிப்பிட்டு இவர்கள் தான் பொறுப்பு என்று சொல்லக் கூடியதொரு நிலைமை இருக்குதென்றால் அந்தளவுக்கு மோசமாகக் கொள்ளையடித்தவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை என்ன? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேவேளை, மேற்படி ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரனும் கலந்து கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.